மும்பை : மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர்கள் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் டெல்லி விரைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 30க்கும் மேற்பட்டவர்களை ஒன்று திரண்டி ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு அஜித் பவார் ஆதரவு தெரிவித்தார். இதன் காரணமாக மராட்டிய துணை முதலமைச்சராக அஜித் பவார் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், அவரது அணியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏக்களுக்கு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது.
தங்கள் தரப்புக்கு ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும், தாங்கள் தான் உண்மையான சிவசேனா மற்றும் கட்சியின் பெயர், சின்னம் உள்ளிட்டவற்றை தங்கள் தரப்பு ஒதுக்க வேண்டும் என்றும் அஜித் பவார் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
அஜித் பவார் தலைமையிலான அணியில் 8 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், அவர்களுக்கு இன்னும் இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. முன்னதாக அஜித் பவாருக்கு உள்துறை அல்லது நிதித் துறை ஒதுக்கப்படும் என கூறப்பட்டது. இந்த இரண்டு துறைகளும் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் வசம் உள்ள நிலையில், இந்த இலாகாக்கள் பிரித்துக் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
அண்மையில் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து துணை முதலமைச்சர்கள் தேவேந்திர பட்நாவிஸ் - அஜித் பவார் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், துணை முதலமைச்சர்கள் ஒன்று கூடி அஜித் பவார் அணியைச் சேர்ந்தவர்களுக்கு இலாகா ஒதுக்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான வார்ஷாவில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், அஜித் பவார் அல்லது அவரது தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு நிதித் துறையை ஒதுக்க ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அமைச்சரவை ஒதுக்கீடு குறித்து இன்னும் இறுதி முடிவு செய்யப்படாததால், அமைச்சரவை விரிவாக்கத்திற்கு காலதாமதம் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. விரைவில் மகாராஷ்டிர சட்டப் பேரவையின் மழைக் கால கூட்டத் தொடர் கூட உள்ள நிலையில், அதற்குள் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனை நடத்த மகாராஷ்டிர துணை முதலமைச்சர் டெல்லி சென்று உள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான ஆலோசனையை தொடர்ந்து மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : பாஜகவுக்கு அடுத்தடுத்து செக்... உத்தரகாண்ட் அரசியல் நிலவரத்தை ஆராயும் ராகுல்... காங். திட்டம் பலிக்குமா?