மும்பை: மகாராஷ்டிரா அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் மாதம், 800 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு காஷித் என்ற திருநங்கை விண்ணப்பித்திருந்தார். இந்த தேர்வில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதையடுத்து, மகாராஷ்டிரா அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக்கோரி, காஷித் மகாராஷ்டிரா நிர்வாக தீர்ப்பாயத்தின் மும்பை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், திருநங்கைகளுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீட்டை வழங்குவது தொடர்பாக ஆறு மாதங்களில் கொள்கை முடிவு எடுக்க மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று(நவ.7) இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திருநங்கைகளுக்கான இடஒதுக்கீட்டுக்கொள்கையை உருவாக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகத்தெரிவித்தார். இதற்கு தீர்ப்பாயம் கடும் அதிருப்தி தெரிவித்தது. இதுநாள் வரை கொள்கை முடிவு எடுக்கப்படவில்லை என்ற மாநில அரசின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தது.
மேலும், உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வில் திருநங்கைகளுக்கு ஒரு பணியிடத்தை ஒதுக்கவும், இனி மாநில அரசின் அனைத்து தேர்வுகளிலும் திருநங்கைகளுக்கு ஒரு பணியிடத்தை ஒதுக்கவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஒரு தேர்வர் மட்டுமே வழக்குத் தொடர்ந்திருப்பதால் ஒரு பணியிடத்தை ஒதுக்க தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பாயம் தெரிவித்தது.
இதையும் படிங்க: ஆணாக மாறி மாணவியை மணந்த ஆசிரியை.. இப்படியும் ஒரு காதலா?