போபால் : பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி பர்வேஷ் சுக்லாவின் வீடு உள்ளிட்டவைகள் புல்டோசர் கொண்டு இடித்து தள்ளப்பட்டன.
மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ், இளைஞர் மீது சிறுநீர் கழித்த நபர் பாஜக நிர்வாகி என்றும், பழங்குடியின மக்களின் நலன் குறித்து பொய்யாக பேசும் பாஜக தலைவர்கள், ஏழை பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழிப்பது போன்று நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது என்றும் பதிவிட்டு உள்ளார்.
மேலும் வீடியோவை மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு டேக் செய்த அவர், இதுதான் பழங்குடியின மக்கள் மீது நீங்கள் கொண்டு உள்ள நலனா? ஏன் அந்த பாஜக தவைவர் இன்னும் கைது செய்யப்படவில்லை? என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த நபர் பர்வேஷ் சுக்லா என்றும், பாஜக எம்.எல்.ஏ கேதர்நாத் சுக்லாவின் பிரதிநிதி என்றும் அப்பாஸ் ஹபீஸ் தெரிவித்தார்.
பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பர்வேஷ் சுக்லா பாஜக மூத்த தலைவர்களுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்த அப்பாஸ் ஹபீஸ் அந்த புகைப்படங்களை வெளியிட்டார். இதையடுத்து இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பர்வேஷ் சுக்லா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக வலைதளங்களில் பொது மக்கள் தொடர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தவும், தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கடுமையான விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். தலைமறைவாக இருந்த பர்வேஷ் சுக்லாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த வழக்கில் சித்தி பகுதியில் உள்ள பர்வேஷ் சுக்லாவின் வீடு உள்ளிட்டவைகள் புல்டோசர் கொண்டு இடித்து அகற்றப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி காங்கிரஸ் கோரிக்கை விடுத்து உள்ளது. அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பாஜக சார்பில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பர்வேஷ் சுக்லாவின் தந்தை ராம்காந்த் கூறுகையில், ஒரு போலி வழக்கில் தனது மகனை சிக்க வைக்க சதித் திட்டம் நடப்பதாகவும், பாஜக எம்.எல்.ஏ கேதர்நாத் சுக்லாவிடம் கடந்த சில ஆண்டுகளாக தனது மகன் பணியாற்றி வரும் நிலையில், பர்வேஷ் தன்னிடம் பணியாற்றவில்லை என கேதர்நாத் சுக்லா கூறியதை தன்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும் கூறினார்.
இதையும் படிங்க : Tabrez Ansari: 10 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்... ஜார்கண்ட் நீதிமன்றம் அதிரடி!