குவாலியர் : மத்தியப் பிரதேசத்தில் மகளைத் திருமணம் முடித்து தருவதாகக் கூறி லட்சம் ரூபாயும், 9 எருமை மாடுகளையும் வரதட்சணையாகப் பெற்று நூதன மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். குவாலியர் மாவட்டம், சுரெல்லா பகுதியைச் சேர்ந்தவர், கன்ஷியாம் குர்ஜார்.
அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா சிங் குர்ஜார் என்பவரிடம் தனது மகளை திருமணம் முடித்து தருவதாக கன்ஷியாம் குர்ஜார் கூறியதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் தனது மகளை திருமணம் முடித்து தர வேண்டுமானால் லட்சம் ரூபாய் பணமும், 9 எருமை மாடுகளும் வரதட்சணையாகத் தர வேண்டும் என கன்ஷியாம் குர்ஜார் கோரியதாக கூறப்படுகிறது.
இதற்கு கிருஷ்ணா சிங் ஒப்புக் கொண்டதாகவும், அவரிடம் இருந்து 9 எருமை மாடுகள் மற்றும் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் வரை கன்ஷியாம் பெற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. திருமணப் பேச்சுவார்த்தையில் ஈடுபட கன்ஷியாம் வீட்டிற்குச் சென்ற கிருஷ்ணா சிங்கிற்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
இதையும் படிங்க : அமெரிக்காவில் 3வது வங்கி திவால்? பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியை கைப்பற்றிய ஜேபி மோர்கன் வங்கி!
கன்ஷியாமிக்கு திருமண வயதில் பெண் குழந்தைகளே இல்லை என்பது கிருஷ்ணா சிங்கிற்கு தெரிய வந்து உள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கிருஷ்ணா இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். புகார் குறித்து விசாரணை நடத்திய போலீசார், திருமண வயதில் பெண் குழந்தைகளே இல்லாமல் கிருஷ்ணா சிங்கிற்கு திருமணம் முடித்து தருவதாக கன்ஷியாம் குர்ஜார் மோசடியில் ஈடுபட்டதைக் கண்டறிந்தனர்.
புகார் குறித்து நடவடிக்கை எடுத்த போலீசார், கன்ஷியாம் குர்ஜாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 9 எருமை மாடுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். வரதட்சணையாகப் பெற்ற 1 லட்ச ரூபாய் பணத்தை திரும்பப் பெறுவது குறித்து கன்ஷியாம் குர்ஜரிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
திருமண வயதில் பெண் குழந்தைகளே இல்லாத நிலையில், மகளைத் திருமணம் செய்து தருவதாகக் கூறி லட்ச ரூபாய் பணம் மற்றும் 9 எருமை மாடுகளை வரதட்சணையாகப் பெற்று மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் கன்ஷியாம் வேறு யாருடனும் மோசடியில் ஈடுபட்டு உள்ளாரா என விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறினர்.
அவ்வப்போது இது போன்ற திருமண மோசடிகள் அரங்கேறி வருவதாகவும் மக்கள் கவனமுடன் செயல்படுமாறும் போலீசார் எச்சரிக்கை தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : விவாகரத்து பெற 6 மாத கால அவகாசம் தேவையில்லை - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!