போபால்: 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்திற்கு கடந்த நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், ஆட்சிக்கு தேவையான 116 இடங்களையும் தாண்டி பாஜக 163 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
இந்நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர் மத்திய பிரதேச முதலமைச்சராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். உஜ்ஜய்ன் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வான மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். நேற்று (டிச. 13) போபாலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக மோகன் யாதவ் பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு ஆளுநர் மங்குபாய் சி. படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர்களாக ஜகதீஷ் தேவதா மற்றும் ராஜேந்திரா சுக்லா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் 11 மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பதவியேற்பை தொடர்ந்து முதல் முறையாக அமைச்சரவையை கூட்டிய முதலமைச்சர் மோகன் யாதவ், இரண்டு அதிரடி அறிவுப்புகளை வெளியிட்டு உள்ளார். அதன்படி மாநிலத்தில் திறந்த வெளியில் வைத்து இறைச்சி, முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகளை விற்பனை செய்ய தடை விதித்து உள்ளார்.
இந்த உத்தரவை பின்பற்றும் வகையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், காவல் துறை, நகர்ப்புற அமைப்புகள் திறந்தவெளியில் இறைச்சி, முட்டை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டதை டிசம்பர் 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதிக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.
மேலும், திருவிழாக்கள், வழிபாட்டு தலங்களில் உச்ச நீதிமன்றம் அனுமதித்த அளவை காட்டிலும் ஒலிக்கப்பட்டும் ஒலிபெருக்கிகளை தடை செய்து முதலமைச்சர் மோகன் யாதவ் உத்தரவிட்டு உள்ளார். மேலும் உத்தரவை மீறும் எந்தவொரு முயற்சியையும் கண்காணிக்க அனைத்து மாவட்டங்களிலும் அரசு பறக்கும் படைகளை அனுப்பும் என்றும் அனுமதியின்றி அல்லது விதிகளை மீறி ஒலிபெருக்கிகளை பயன்படுத்தினால், அதிகாரிகள் மூன்று நாட்களுக்குள் தங்கள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மோகன் யாதவ் உத்தரவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க : எம்.பிக்கள் சஸ்பெண்ட்... எப்படி ஜனநாயகம்? - கனிமொழி எம்.பி. கேள்வி!