உத்தரபிரதேசம்: அம்ரோஹா நகரில் உள்ள செக்யூரிட்டி ஏஜென்சி அலுவலகத்தில் கடந்த 9ஆம் தேதி பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்த பெண் குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெண்ணின் சடலத்துடன் கிடந்த அடையாள அட்டை மற்றும் செல்போனைக்கொண்டு உயிரிழந்தவர் சல்மா என்றும்; தெலங்கானாவைச் சேர்ந்தவர் என்றும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் முகநூல் மூலம் பழக்கமான உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெயிண்ட் கடை உரிமையாளர் மொகத் ஷேசாத் என்பவரை சந்திக்க வந்தது தெரிய வந்தது.
முகநூல் மூலம் மொகத் சேஷாத்துடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், பின்னர் அது காதலாக மாறி உள்ளது. காதலரை கரம் பிடிக்க ஏறத்தாழ ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரம் பயணித்த சல்மா, அம்ரோஹா நகருக்கு வந்துள்ளார்.
தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு காதலன் சேஷாத்தை, சல்மா வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இருவருடைய பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறிய நிலையில், சல்மாவின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்தும், செங்கல்லால் தலையில் பலமாக தாக்கியும் சேஷாத் கொலை செய்ததாக போலீசார் கூறினர்.
அடுத்தகட்ட விசாரணையில், ஏற்கெனவே சேஷாத் திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் எனத் தெரியவந்துள்ளது. கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், சேஷாத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வான் சாகசத்தில் விபரீதம் - விண்ணில் வெடித்து சிதறிய போர் விமானங்கள்!