ஜான்சி: உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சி நகரைச் சேர்ந்தவர்கள் சனா கான் மற்றும் சோனா ஸ்ரீவத்சவா. இரு பெண்களும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதில் காதலிக்காக ஆணாக மாறும் முடிவை சனா கான் எடுத்துள்ளார். அதன்படி டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு சனா கான் ஆணாக மாறினார்.
காதலிக்காக ஆணாக மாறிய சனா கான் தனது பெயரை சுஹைல் கான் என மாற்றிக்கொண்டார். இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சோனா ஸ்ரீவத்சவாக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரியவருகிறது. நள்ளிரவில் சுஹைலை அருகில் வைத்துக்கொண்டே ஆண் நண்பருடன் சோனா கதையடித்துக் கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து கேட்டதற்கு, சுஹைல் கானை வீட்டுவிட்டு வெளியேறுமாறும், மீண்டும் பெண்ணாக மாறி வருமாறும் சோனா கூறியதாக சொல்லப்படுகிறது. வாக்குவாதம் முற்றி இருவரும் தனித்தனியாக வாழத் தொடங்கினர். ஆணாக மாற அறுவை சிகிச்சை உள்ளிட்ட பணிகளுக்காக ஏறத்தாழ 6 லட்ச ரூபாயை செலவழித்ததாக சுஹைல் கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோனாவால் கைவிடப்பட்டு நடுவீதிக்கு வந்த சுஹைல் கான், தன் காதலியை மீண்டும் சேர்த்து வைக்குமாறு கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். வழக்கில் ஆஜராக கூறி சோனாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அதை அவர் உதாசீனப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சோனா ஸ்ரீவத்சவாக்கு பிடிவாரண்டு உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.
சோனா ஸ்ரீவத்சவா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. இதனிடையே வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை பிப்ரவரி மாதத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்த நிலையில், சோனாவால் தனக்கு ஆபத்து இருப்பதாகவும், அவர் தரப்பில் சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் சுஹைல் கான் புகாரளித்துள்ளார்.
இதையும் படிங்க: இயக்குநர் லீனா மணிமேகலையை கைது செய்யத் தடை; உச்ச நீதிமன்றம் உத்தரவு