பாட்னா: பீகார் சட்டமன்றத்தின் குளிர்கால அமர்வில் பங்கேற்க சென்ற ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்எல்ஏ பகதூர் சிங், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில், சச்சி ராமாயணம் என்ற புத்தகத்தை சுட்டிக்காட்டினார். பெரியார் எழுதிய "Ramayan a true reading" புத்தகத்தை, லலயி யாதவ் என்பர் இந்தியில் மொழி பெயர்த்திருந்தார். இந்த புத்தகத்தை வெளியிட முதலில் அப்போதைய உத்தர பிரதேச மாநில அரசு தடை விதித்து. ஆனால் 1976ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தலையீட்டின் கீழ் இந்தியில் புத்தகம் வெளியானது.
இதனை சுட்டிக்காட்டியுள்ள, பகதூர் சிங்கிடம், அவர்களின் தலைவரான லாலு யாதவ் கூட கடவுளை பூஜிக்கிறார் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், அப்படி ஒருவேளை கடவுள் இருந்தாலும், அவருக்கும் பக்தருக்கும் இடையே இடைத்தரகர்களுக்கு என்ன வேலை? கடவுளை பக்தர்கள் ஏன் நேரடியாக வணங்குவதில்லை என கேள்வி எழுப்பினார். தன்னுடைய கருத்துக்களால் பக்தர்களுக்கு எந்த இடைஞ்சலும் இல்லை என்றும், இடைத் தரகர்களுக்குத் தான் பிரச்சனை என்றும் கூறினார்.
கடவுள் இருப்பது உண்மையானால், அவருக்கும் பக்தர்களுக்கும் இடையே யாரேனும் இருப்பது அவசியமா என்ன? என கேள்வி எழுப்பிய அவர், இடைத் தரகர்களால் முறைகேடுகள் நடப்பதாக மக்களே கூறுகிறார்கள். மக்களே நேரடியாக பூஜை செய்து கொள்ளட்டும், என்னுடைய கருத்தால், இடைத்தரகர்களுக்குத் தான் பிரச்சனை என பகதூர் சிங் கூறினார். பிராமணர்கள் பூஜை என்ற பெயரால் நயவஞ்சகமாக மூடநம்பிக்கையை பரப்புகின்றனர் எனவும் அவர் கூறினார்.
நீங்கள் பூஜை, வழிபாடு செய்கிறீர்களா? என நிருபர்கள் விடாது கேள்விகளை தொடுத்தனர். இதற்கும் பதிலளித்த அவர், ஆம் நானும் பூஜை செய்கிறேன், நமக்கு எல்லாவற்றையும் வழங்கிய தந்தையையும், தாயையும் வணங்குகிறேன் என்று கூறினார். பெரியவர்கள் நமக்கு ஞானத்தை வழங்குகின்றனர். சாவித்ரி பாய் புலே, பெண்கள் கல்வி கற்பதற்கான அதிகாரத்தை வழங்கினார். பீமராவ் அம்பேத்கர் அரசியல் சாசன உரிமைகளை வழங்கினார். மற்றும் லாலு பிரசாத் யாதவ், பீகாரில் உள்ள ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோருக்கான குரலாக ஒலித்தார். இவர்களைக் காட்டிலும் பெரிய கடவுள் இருக்க முடியாது என கூறினார்.
பெரியார் எழுதிய "Ramayan a true reading" புத்தகம் 1968ம் ஆண்டில் லலயி யாதவால் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டது. "சச்சி ராமாயண்" எனும் இந்த புத்தகத்தை வெளியிட அரசியல் தலையீடுகள் காரணமாக தடை விதிக்கப்பட்டது. எனினும் உச்சநீதிமன்றம் மூலம் தடை நீக்கப்பட்டு, 1976ம் ஆண்டில் இந்தி மொழியில் புத்தகம் வெளியானது.