ஐதராபாத்: மார்கதர்சி சிட்பண்ட் பிரச்சினை தொடர்பாக அந்நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், இந்த உத்தரவை மீறி ஆந்திர சிஐடி போலீசார், மார்கதர்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.
இந்நிலையில், இந்த நோட்டீசை எதிர்த்து மார்கதர்சி சிட்பண்ட் தலைமை நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண், நீதிமன்ற அவமதிப்பின் கீழ் ஆந்திர சிஐடி போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனுத் தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி, கே.சுரேந்தர் அமர்வில் இன்று (நவ.29) விசாரணைக்கு வந்தது.
வழக்கில் மார்கதர்சி சார்பில் மூத்த வழக்கறிஞர் தம்மலாபதி ஸ்ரீனிவாஸ் மற்றும் வழக்கறிஞர் வசிரெட்டி விமல் வர்மா ஆகியோர் ஆஜராகினர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ஆந்திர சிஐடி போலீசார் தரப்பில் கடந்த விசாரணையின் போது காலக்கெடு விதிக்கப்பட்டதாகவும் ஆனால் தற்போது வரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் வாதிட்டனர்.
தொடர்ந்து ஆந்திர சிஐடி போலீசார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கைலாசநாத் ரெட்டி, லுக் அவுட் நோட்டீஸ் எதற்காக பிறப்பிக்கப்பட்டது என்பதற்கு எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக கூறினார். தொடர்ந்து மார்கதர்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் தங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்காமல் வெளிநாடு சென்றதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த விவகாரத்தில் ஆந்திர சிஐடி லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியதற்கு சரியான காரணம் இல்லை என்றும் நீதிமன்றம் உத்தரவு இருக்கும் போது லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய போது காலக்கெடு இருப்பதாகவும், விரைவில் இது தொடர்பாக அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஆந்திர சிஐடி போலீசார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கைலாசநாத் தெரிவித்தார். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 15ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க : சென்னை ரயிலில் 100 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு! ரயில் உணவு மோசமா? என்ன காரணம்?