டெல்லி : தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் விதிகளில் மாற்றம் கொண்டு வரும் தேர்தல் ஆணாஇயர் நியமன மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதாவை மத்திய அரசு மக்களவையில் நிறைவேற்றியது.
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை மத்திய அமைச்சரவை பரிந்துரையின் அடிப்படையில் குடியரசு தலைவர் நியமித்து வருகிறார். இதனால் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வதில் சட்டம் இயற்றவும், அதுவரை பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கி குழு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் என்று கூறி உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்தல் ஆணையர் நியமன மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அந்த மசோதா மீதான விவாதம் நடத்த முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து நடப்பு நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டது.
இதையடுத்து, தலைமை தேர்தல் ஆணையர், மற்ற தேர்தல் ஆணையர்கள் நியமனம், பணி வரையறை, பணிக் காலம், தேர்தல் ஆணைய பணி செயல்முறை உள்ளிட்டவை தொடர்பான மசோதாவை மாநிலங்களவையில் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இன்று (டிச. 21) மக்களவையில் தேர்தல் ஆணையர் நியமன மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். தொடர்ந்து மக்களவையில் பேசிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், கடந்த 1991ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தலைமை தேர்தல் ஆணையர், மற்ற தேர்தல் ஆணையர்களின் பணிய நியமன வரையறை அரைகுறை முயற்சியாக இருந்ததாகவும், தற்போதைய மசோதா முந்தைய சட்டத்தில் விடுபட்ட பகுதிகளை உள்ளட்டக்கியது என்றும் அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க : கேரளாவில் கரோனா பரவல் அதிகரிப்பு - கர்நாடக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை? மக்களுக்கு பாதிப்பா?
இதையும் படிங்க : நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி - கர்நாடகா டெக்கி கைது! திடீர் ட்விஸ்ட் கொடுத்த போலீசார்! என்ன நடந்தது?