டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் கூட்டத்தொடரின் 10வது நாளன்று, 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடந்த அதே நாளான டிசம்பர் 13ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் இருந்த பாதுகாப்பினை மீறி, இரண்டு பேர் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அவைக்குள் நுழைந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இந்த சம்பவத்தை அடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, உபா சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று நாடாளுமன்றத்தில், இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சரும், பிரதமரும் விளக்கமளிக்க வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் ஏற்பட்ட அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டு, எதிர்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டும் இருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடிய நிலையில் 1 நிமிடத்திற்குள்ளாகவே மீண்டும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, உள்துறை அமைச்சர் நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரம் தொடர்பாக அவையில் விளக்கமளிக்க வேண்டும் எனவும், அவர் பதவி விலக வேண்டும் எனவும், அவையில் அத்துமீறியவர்களுக்கு பாஸ் வழங்கிய பாஜக எம்.பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர்.
மக்களவை உறுப்பினர்கள் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டதால் அவைக்குத் தலைமை வகித்த ராஜேந்திர அகர்வால், பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த பாதுகாப்பு மீறல் காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக அவையில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், மாநிலங்களவையும் எதிர்கட்சிகளின் கடும் அமளியால் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்பட எதிர்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.