புதுச்சேரி ஆண்டியார் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் டெய்லர் தொழில் செய்துவருகிறார்.
இவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்துவருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கள்ளச்சாராயம் விற்பனை
இதையடுத்து விசாரணையில் ஈடுபட்ட காவல் துறையினர் ஆறுமுகத்தின் மாமனார் மதகடிபட்டு பகுதியில் உள்ள வீட்டில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்துவருவது தெரியவந்தது.
இதையடுத்து ஆறுமுகத்தின் மாமனார் பழனி வீட்டில் இன்று அதிரடியாக சோதனை நடத்தியதில், குழிதோண்டி கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருப்பதும், காரில் கள்ளச்சாராயம் தயாரிக்க தேவையான எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
4,165 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
இதையடுத்து 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 119 கேண்களைக் கொண்ட 4,165 லிட்டர் எரிசாராயத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 25 லட்சம் என கணக்கிடப்பட்டது.
டெய்லர் ஆறுமுகத்தை கைதுசெய்ய சென்றபோது அவர் தப்பி ஓடி தலைமறைவானார். விசாரணையில், ஆறுமுகம் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்களுக்கு எரிசாராயம் வழங்கி வந்ததும், அதனை தனது வீட்டில் பதுக்கி வைக்காமல் தனது வயதான மாமனார் வீட்டில் பதுக்கி வைத்ததும் தெரியவந்தது.