டெல்லி: தலைநகர் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே காணப்படுகிறது.
அண்மையில் நடந்த டெல்லி மாநகராட்சித் தேர்தலின்போது வெளியிடப்பட்ட அரசு விளம்பரங்கள், அரசியல் விளம்பரங்களாக இருந்ததாகவும், அதற்காக ஆம் ஆத்மி கட்சியிடம் 97 கோடி ரூபாய் வசூலிக்குமாறும், டெல்லி தலைமைச்செயலருக்கு, துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா உத்தரவிட்டதாகத் தகவல் வெளியானது.
உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி அமைக்கப்பட்ட குழு, பரிந்துரை செய்த உள்ளடக்க விதிகளை மீறி, ஆம் ஆத்மி கட்சி அரசு செலவில் அரசியல் விளம்பரங்களை செய்ததாகவும், அதனால் டெல்லி அரசுக்கு ஏறத்தாழ 97 கோடியே 15 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அரசு விளம்பரங்களை அரசியல் விளம்பரங்களாக மாற்றியதற்காக ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து 97 கோடி ரூபாய் பணத்தை தலைமைச் செயலாளர் வசூலிக்கக் கோரி, டெல்லி துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஆளுநரின் உத்தரவுக்கு ஆம் ஆத்மி கட்சி செய்தித் தொடர்பாளர் பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த ஆம் ஆத்மி கட்சி செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ், "டெல்லி தலைமைச் செயலாளருக்கு நேரடியாக உத்தரவு போடும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது.
டெல்லி மாநகராட்சி தேர்தல் வெற்றி, தேசிய கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுத்து வருவது உள்ளிட்ட காரணங்களால் பா.ஜ.க பதைபதைத்து வருகிறது. அதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற செயல்களில் துணை நிலை ஆளுநர் ஈடுபட்டுள்ளார்.
பாஜக-வின் கைப்பாவையாக துணை நிலை ஆளுநர் சக்சேனா செயல்பட்டு வருகிறார். இதனால் மக்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. டெல்லி மக்கள் எந்தளவுக்கு கஷ்டப்படுகிறார்களோ, அந்த அளவுக்கு பா.ஜ.க. மகிழ்ச்சி அடைகிறது’ எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வீடு புகுந்து பெண் கடத்தல் - பதறிய பெற்றோருக்கு டிவிஸ்ட் கொடுத்த மகள்