எர்ணாகுளம்: மூட நம்பிக்கைகள் மற்றும் சூனியங்களுக்கு எதிராக கேரள அரசு சட்டம் கொண்டு வரும் என கேரள அரசு உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தை இயற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கேரள முதல்வர் எடுத்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
அத்தகைய சட்டத்தை உருவாக்க அரசு எடுத்த முயற்சிகள் குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எலந்தூர் நரபலி விவகாரம் தொடர்பான மூட நம்பிக்கைகள் மற்றும் சூனியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உயர்நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கேரள யுக்திவாதி சங்கம் அளித்த மனுவை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் பரிசீலித்து வந்தது.
இதுபோன்ற நடைமுறைகளைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி கே.டி.தாமஸ் கமிஷன் அளித்த பரிந்துரைகள் குறித்து முடிவெடுக்குமாறு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரியிருந்தார்.
மாந்திரீகம் மற்றும் மந்திரத்தின் ஒரு பகுதியாக கேரளாவில் இதுபோன்ற கொலைகள் நடந்துள்ளதாகவும், 1955 ஆம் ஆண்டு முதல் பல மாவட்டங்களில் இதுபோன்ற கொலைகள் நடந்து வருகின்றன என மனுதாரர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் இதுபோன்ற செயல்களை சட்டம் மூலம் தடுக்க அரசு முன்வரவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலைகளில் ஹெலிபேடுகள் அமைக்க அரசு பரிசீலனை