டெல்லியில் மது அருந்துவதற்கான வயது வரம்பை 25 லிருந்து 21ஆக அம்மாநில அரசு தற்போது குறைத்துள்ளது. அதுமட்டுமின்றி, அரசு நடத்தும் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா இதுகுறித்துப் கூறுகையில், "மது அருந்துவதற்கான வயது வரம்பு 21ஆக குறைக்கப்படுகிறது. இனி, தேசிய தலைநகரில் புதிதாக மதுபான கடைகள் திறக்கப்படாது" என்றார்.
கலால் வரி கொள்கையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "சில இடங்களில் கடைகள் அதிகமாக இருப்பதாலும் சில இடங்களில் குறைவாக இருப்பதாலும் மதுபான மாஃபியா அதிகரித்துள்ளது. புதிய கலால் வரி கொள்கை அமைச்சரவையின் பரிந்துரையின்பேரில் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்றார்.