டெல்லி : இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்று பத்ம விருதுகள். கலை, இலக்கியம், விளையாட்டு, அறிவியல், மருத்துவம், தொண்டு, பொறியியல், சமூகப் பணி, வர்த்தகம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் குடியரசு தினத்தை முன்னிட்டு 106 பேருக்கு அறிவிக்கப்பட்டது. இதில் 6 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 9 பேருக்கு பத்ம பூஷன் விருதும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது. இதில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட விழாவில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு பத்ம விருதுகளை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
இதில் தமிழகத்தை சேர்ந்த பாம்பு பிடி வீரர்கள் கோபால், மாசி சடையன் உள்ளிட்டவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் அடுத்தகட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா நேற்று (ஏப்.5) ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது. உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவிற்கு அறிவிக்கப்பட்ட பத்ம விபூஷன் விருதை அவரது மகன் அகிலேஷ் யாதவ் குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
வயிற்றுப் போக்கு உள்ளிட்ட நோய் பாதித்து உடலில் நீர் சத்து வற்றிப்போனவர்களுக்கு வழங்கப்படும் ஓஆர்எஸ் எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை கண்டுபிடித்த மறைந்த மருத்துவ பேராசிரியர் திலீப் மஹலானாபிசுக்கான விருதை, அவரது உறவினர் குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
அவரைத் தொடர்ந்து எழுத்தாளர் மற்றும் தொண்டு நிறுவனரும், இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியுமான சுதா மூர்த்திக்கு பத்ம பூஷன் விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். இந்த விருது விழாவில் சுதா மூர்த்தியின் மகளும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவியுமான அக்ஷதா சுனக் கலந்து கொண்டார்.
விழாவில் முன்வரிசையில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு அருகில் அமர்ந்து கொண்ட அக்ஷதா சுனக், தன் தாய் விருது பெறுவதை கண்டு மகிழ்ச்சி அடைந்தார். அதேபோல் ஆர் ஆர் ஆர் படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி, குடியரசுத் தலைவரிடம் இருந்து பத்மஸ்ரீ விருதை பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத் துறை அமைச்சார் ஜெய்சங்கர், மக்களை சபாநாயகர் ஓம் பிர்லா, பல்வேறு துறை மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : வினாத்தாள் லீக் விவகாரம்: தெலங்கானா பாஜக மாநிலத்தலைவர் பண்டி சஞ்சய் அதிரடி கைது!