கோலாப்பூர் (மகாராஷ்டிரா): மகாராஷ்டிரா மாநிலம், ராதநகரி பகுதியில் உள்ள பட்டாம்பூச்சி பூங்காவில் நாட்டின் மிகப்பெரிய பட்டாம்பூச்சி வகையான சதர்ன் பேர்ட்விங் (Southern Birdwing) காணப்பட்டது. இதற்கு சஹ்யாத்ரி பேர்ட்விங் (Sahyadri Birdwing) என்று மற்றொரு பெயரும் உள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பட்டாம்பூச்சியாக அறியப்படும் சதர்ன் பேர்ட்விங் மற்ற பட்டாம்பூச்சிகளை விட, அதன் அளவில் பல மடங்கு பெரியதாக உள்ளது. இது சுமார் 150 முதல் 200 மிமீ வரை இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பல வண்ணங்களில் இந்த பட்டாம்பூச்சியை காணமுடியும் என்றும் கூறுகின்றனர்.
ராதநகரி பூங்காவில் காணப்பட்ட பட்டாம்பூச்சியின் உடல் கோல்டன் நிறத்திலும், இறக்கைகள் நீல நிறத்திலும் உள்ளன. பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பட்டாம்பூச்சியைக் கண்டு புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மேலும் இந்த பூங்காவில் பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன. 55க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி வகைகள் இந்த பூங்காவில் காணப்படுகின்றன.
முன்னதாக நாட்டின் மிகச்சிறிய பட்டாம்பூச்சி வகையான 'கிராஸ் ஜூவல்' பட்டாம்பூச்சி இந்தப் பூங்காவில் தான் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டாம்பூச்சி 5 முதல் 7 மி.மீ., வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
ராதநகரி பூங்கா துணைத் தலைவர் ரூபேஷ் பாம்பேடே கூறுகையில், "சதர்ன் பேர்ட்விங் பட்டாம்பூச்சி அதன் அளவில் மிகப்பெரியது. மற்ற பட்டாம்பூச்சிகளைப் போல் இதற்கு வால் இருக்காது. இது ஸ்வாலோடெல் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சி வகை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மழைக்காலத்தில் இந்த பட்டாம்பூச்சி அதிகம் காணப்படுகிறது. இந்த பட்டாம்பூச்சி அனைத்து சூழல்களிலும் வாழக்கூடியது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 130 ஆண்டுகள் பழமையான மரத்தை புதுப்பிக்க ஆயுர்வேத சிகிச்சை - கேரள மருத்துவர்களின் புதிய முயற்சி!