லக்கிம்பூர் கெரி (உத்தர பிரதேசம்): நாட்டை உலுக்கிய லக்கிம்பூர் கெரி விவசாயிகள் படுகொலை வழக்கில் ஒன்றிய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.
உத்தர பிரதேசத்தின் லகிம்பூர் கெரி மாவட்டத்தில் அக்டோபர் 3ஆம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியது. இதில், 4 விவசாயிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் ஒரு பத்திரிக்கையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
விவசாயிகள் மீது மோதிய காரில் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக சந்தேகிக்கப்பட்டது. இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வன்முறை தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலைவழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவரை அழைத்து, மாநில குற்றப்பிரிவுக் காவல் துறையினர் 12 மணிநேரம் விசாரணை நடத்தினர். ஆனால், அவர் விசாரணைக்கு சரிவர ஒத்துழைக்கவில்லை என காவல் துறை துணைத் தலைவர் உபேந்திர அகர்வால் தெரிவித்தார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனக் கூறினார்.
விவசாயிகள் போராட்டம்
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஒன்றிய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சூழலில், கார் ஒன்று வேகமாக போராட்டக்காரர்கள் மீது மோதியதில், விவசாயிகள் நால்வர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தாக்குதலில், பொதுமக்கள் மூன்று பேர், உள்ளூர் செய்தியாளர் ஒருவர் என மொத்தம் எட்டு பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காணொலி ஒன்று வெளியாகி நாட்டு மக்களை உலுக்கியது.
வெளியான அதிர்ச்சி காணொலி
அதில், அமைச்சர் வாகனங்களை மறித்துப் பேரணியாகச் சென்ற விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொல்வதுபோல காட்சியிருந்தது. இதில் சம்பந்தபட்டதாகக் சந்தேகிக்கப்படும் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஆகியோரைக் கைதுசெய்ய பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இச்சூழலில், போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதலுக்கு இடையில் காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் இறந்த செய்தியாளரின் உறவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், உடற்கூராய்வு செய்யாமல் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யமாட்டோம் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தடுத்து நிறுத்தப்பட்ட தலைவர்கள்
இதனிடையே லக்கிம்பூர் செல்ல முயன்ற பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டனர். தொடர்ந்து லக்னோ விமான நிலையத்தில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகலையும் அனுமதிக்காமல் உபி அரசு தடைவிதித்தது.
அதுமட்டுமில்லாமல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னி ஆகியோரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
சந்தேக அமைச்சர் உள் துறை அமைச்சருடன் சந்திப்பு
இவ்வேளையில் ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது அலுவலகத்தில், விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகிக்கப்படும் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா சந்தித்துப் பேசினார்.
அப்போது லக்கிம்பூர் கேரி டிகோனியா கிராமத்தில் நடந்தது குறித்து விளக்கமளித்தார். அதில், "தனது பூர்விக கிராமமான பன்வீர்பூரில் ஆண்டுதோறும் நடக்கும் குஸ்தி பந்தயம், இந்த ஆண்டும் நடந்தது. அந்த விழாவில் நானும் என் மகனும் கலந்துகொண்டோம். ஆனால், என் மகன் அந்த கிராமத்தை விட்டு வெளியேறவில்லை" என்று விளக்கமளித்துள்ளார்.
மேலும், டிகோனியா கிராமத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றிக்கொன்றதாகவும், தன்னைப் பிடிக்க முயன்ற குர்விந்தர் சிங்கை துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தியதாகவும் வெளியான செய்திகள் அனைத்தும் தவறானவை என்றும், சமூக இணையதளங்களில் வெளியான காணொலிகள் அனைத்தும் சித்திரிக்கப்பட்டவை என்றும் அஜய் மிஸ்ரா குறிப்பிட்டார். தன் மகன் பன்வீர்பூரில்தான் தங்கி இருந்தார் என்பதற்குச் சான்றுகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
நிவாரணம்
லக்கிம்பூர் கெரியில் கொல்லப்பட்ட விவசாயிகள், செய்தியாளர் குடும்பத்துக்கு தலா 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னியும், சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேலும் அறிவித்துள்ளனர்.
தாமாக முன்வந்து வழக்கு
இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, நீதிபதி சூரிய காந்த், ஹிமா கோலி ஆகியோரின் அமர்வு விசாரித்து வருகிறது.
முதல் நாள் விசாரணையில், லக்கிம்பூர் படுகொலை விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை, குற்றஞ்சாட்டப்பட்டர் ஆஜராக கால அவகாசம் அளித்துள்ளீர்கள், இதுவே சாதாரண நபர் என்றால் இவ்வாறு நடந்துகொள்வீர்களா? நடந்த சம்பவத்துக்கு மாநில அரசு முழு பொறுப்பு, இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.