உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகளுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறது.
இன்று(அக்.20) இந்த வழக்கின் விசாரணை, தலைமை நீதிபதி ரமணா, நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஹிமா கோலி ஆகியோரின் அமர்வின் முன்வந்தது. உத்தரப் பிரதேச அரசின் சார்பாக மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆஜரானார்.
அவர், உத்தரப் பிரதேச அரசின் விசாரணை அறிக்கையை மூடப்பட்ட கவரில் நீதிபதிகள் முன் தாக்கல் செய்தார். அதைப் பார்த்த நீதிபதிகள், "நேற்றிரவு ஒரு மணி வரை அறிக்கைக்காக காத்திருந்தோம். ஆனால் தற்போது கடைசி நேரத்தில் அவசர அவசரமாக தாக்கல் செய்துள்ளீர்கள். இது சரியான அணுகுமுறையல்ல.
மொத்தமுள்ள 44 சாட்சிகளில், நான்கை மட்டுமே விசாரித்துள்ளீர்கள். மற்றவர்களை ஏன் விசாரிக்கவில்லை" என சரமாரியாக கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தை தேவையில்லாமல் அதீதமாக தலையிட வைக்கும் சூழலுக்கு உத்தரப் பிரதேச அரசு தள்ளுகிறது. இதை மாற்றி விசாரணையை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கானுக்கு பிணை மறுப்பு