ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வங்கியில் பணியாற்றி வருபவர் சுனில் குமார். இவருக்கு சுஹாசினி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்கத் தொடங்கினர்.
சுஹாசினி சுனில் குமாரிடம் தான் ஒரு அநாதை என்று கூறியுள்ளார். இதனையடுத்து இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டுள்ளனர். திருமணத்தின்போது மணமகன் குடும்பத்தினர் சுஹாசினி குடும்பத்துக்கு 10 சவரன் நகையை கொடுத்துள்ளனர்.
திருமணமாக சில நாள்களுக்குப் பிறகு தன்னை வளர்த்தவர்களுக்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறி சுனிலிடமிருந்து 4 லட்ச ரூபாய் பணமும், அவரது மாமனாரிடமிருந்து 2 லட்ச ரூபாய் பணத்தையும் சுஹாசினி பெற்றுள்ளார். இதன் பின்னர் வீட்டில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனையடுத்து சந்தேகமடைந்த சுனில் குமார், வீட்டிலிருந்த சுஹாசினியின் ஆவணங்களை ஆராய்ந்துள்ளார். அப்போது அவரது ஆதார் அட்டையை வைத்து விசாரித்ததில் சுஹாசினிக்கு நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த நபருடன் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது தெரியவந்தது.
இதன் பின்னர் சுஹாசினி சுனிலை அழைத்து, தான் பெற்றுச்சென்ற பணத்தை திரும்ப கொடுப்பதாக தெரிவித்துள்ளார். தனக்கு முன்பே திருமணமானதையும் தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறையிடம் செல்லக்கூடாது எனக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இதன் பிறகு சுனில் அலிபிரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சுஹாசினி மீது வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: காதல் திருமணம் குறித்த சர்ச்சையில் ஒருவர் உயிரிழப்பு - மூவர் கைது!