திருவனந்தபுரம் (கேரளா): கேரளாவில் திரிக்காகரா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் உமா என்பவரும், ஆளும் இடது ஜனநாயக முன்னணி சார்பில் ஜோ ஜோசப் என்பவரும் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த இடைத்தேர்தலில் ஜோ ஜோசப்பிற்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்போவதாகவும், அதேநேரம் காங்கிரஸிலிருந்து விலகப்போவதில்லை என்றும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.தாமஸ் தெரிவித்திருந்தார்.
இதற்கு காங்கிரஸ் தலைமை கடும் எதிர்ப்புத் தெரிவித்து, அவரை எச்சரித்தது. இந்த நிலையில் ஜோ ஜோசப்பை ஆதரித்து, கொச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட இடது ஜனநாயக முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் கே.வி.தாமஸும் கலந்து கொண்டார்.
காங்கிரஸ் மேலிடத்தின் எச்சரிக்கையை மீறி கே.வி.தாமஸ் இந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டது, அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கே.வி. தாமஸ் நீக்கப்பட்டதாக கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. சுதாகரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் - உதய்பூர் சென்ற ராகுலுக்கு உற்சாக வரவேற்பு