பாட்னா: பிகாரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை (நவ3) நடைபெறுகிறது. 94 தொகுதிகளில் 2.85 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 1463 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் முக்கிய தொகுதியான பாட்னாவின் மூன்று தொகுதிகளும் வருகின்றன.
அதிகபட்சமாக மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் 27 வேட்பாளர்கள் உள்ளனர். நிதிஷ் குமாரின் அரசுக்கு எதிரான வாக்குகளை பெறும் முயற்சியில் தேஜஸ்வி யாதவ் களம் காண்கிறார்.
31 வயதான தேஜஸ்வி ரகோபூர் தொகுதியில் களம் காண்கிறார். இவரை எதிர்த்து பாஜகவின் சதீஷ் குமார் களம் காண்கிறார். இவர், 2010ஆம் ஆண்டு தேர்தலில் ராப்ரி தேவியை தோற்கடித்தவர் ஆவார்.
இரண்டாம் கட்ட தேர்தலில் பாஜக 46 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளிலும் களம் காண்கிறது. இதேபோல் எதிர்தரப்பில் காங்கிரஸ் 24 தொகுதிகளிலும், சிபிஐ மற்றும் சிபிஎம் தலா நான்கு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. லோக் ஜனசக்தி 52 தொகுதிகளில் களம் காண்கிறது. ஆர்எல்எஸ்பி 36 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 34 சதவீதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் ஆவார்கள். இதில் 27 சதவீதத்தினர் மீது பெரிய குற்ற வழக்குகள் உள்ளன. 49 சதவீதம் வேட்பாளர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் ஆவார்கள். இதேபோல் 34 சதவீதம் வேட்பாளர்கள் கோடிகளுக்கு மேல் சொத்து கொண்டவர்கள் ஆவார்கள்.
பிகாரில் ஒவ்வொரு தேர்தலின்போது சாதி வாக்குகள் ஆதிக்கம் செலுத்தும். அந்த வகையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் தலித் சமூகத்தினர் பெருமளவு உள்ளனர். கோவிட்-19 பெருந்தொற்றுக்கு இடையே நடத்தப்படும் தேர்தல் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிகாரில் 1990ஆம் ஆண்டு நடந்த தேர்தல் மிகவும் வன்முறைக்குள்ளான தேர்தலாக பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் 80 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர். மாநிலத்தில் மூன்றாம் கட்ட தேர்தல் நவம்பர் 7ஆம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நவம்பர் 10ஆம் தேதி அறிவிக்கப்படுகின்றன.