புதுச்சேரி: தனியார் டெக்னாலஜி நிறுவனத்துடன் சேர்ந்து புதுச்சேரி அரசு, துத்திப்பட்டு கிராமத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கிரிக்கெட் மைதானம் அமைத்துள்ளதாக அண்மையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அருண் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்யுமாறும் உத்தரவிட்டார்.
இதையடுத்து இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த பிரச்னை குறித்து விசாரணை நடத்த மத்திய லஞ்ச ஒழிப்பு துறைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பரிந்துரை செய்துள்ளார்.
சர்ச்சைக்குரிய அந்த கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (நவம்பர் 15) நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்த விளையாட்டுத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அரசின் மீதான காழ்ப்புணர்ச்சியால் கிரிக்கெட் மைதான விவகாரத்தில் கிரண்பேடி தலையிடுகிறார் என தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "துத்திப்பட்டில் உள்ள இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் போன்ற ஒரு மைதானத்தை அரசு அமைக்க முடியாது. இதனால், கிரிக்கெட் வாரியம் சார்பில் புதுச்சேரியில் ரஞ்சி போட்டி நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் பல தேசியப் போட்டிகளை இந்த மைதானத்தில் நடத்த முடியும். அரசின் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக கிரிக்கெட் மைதான விவகாரத்தில் கிரண்பேடி தலையிடுகிறார். அவருக்கு அரசின் மீது கோபம் இருந்தால் அதை அரசிடம்தான் காட்ட வேண்டும். அதை விடுத்து இதுபோன்று விளையாட்டில் தலையிடுவது தவறு.
இந்த மைதானம் அருகில் அரசு புறம்போக்கு இடங்கள் உள்ளன. அதனை ஆக்கிரமித்திருந்தால் அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும். புதுச்சேரியின் மரியாதையை கிரண்பேடி களங்கப்படுத்துகிறார். மக்கள் யோசிக்க வேண்டும். நம் வீட்டு பிள்ளைகள் இதுபோன்ற மைதானங்கள் கிடைப்பதால் அவர்களது முன்னேற்றம் எப்படி இருக்கும் என யோசித்துப் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜிப்மர் மருத்துவ கல்லூரி இட ஒதுக்கீட்டில் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் சேர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது - நாராயணசாமி