திருவனந்தபுரம்: மதுவிற்பனையில் கேரள மாநிலம் சாதனைப்படைத்துள்ளது. மதுபானங்கள் கார்ப்பரேஷன் (Bevco) மற்றும் நுகர்வோர் பெட் நிறுவனத்தின் விற்பனை நிலையங்கள் மூலம் மட்டும் ரூ.117 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பெவ்கோ நிறுவனம் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி(பூராடம் நாள்) ரூ.104 கோடிக்கு மது விற்பனை செய்துள்ளது.
பெவ்கோ வரலாற்றில் ஒரு நாள் மது விற்பனை 100 கோடியைத்தாண்டியது இதுவே முதல் முறையாகும். கடந்த ஆண்டு பூராடம் நாளில் ரூ.78 கோடிக்கும், உத்ராடம் நாளில் (திருவோணத்திற்கு முதல் நாள் ) ரூ.85 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது. இத்துடன் ஒப்பிடும் போது, இம்முறை மது விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஓணம் பண்டிகை வாரத்தில் கேரள மாநிலம் முழுவதும் ரூ.625 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. பெவ்கோவின் விற்பனையில் 85 விழுக்காடு மாநில அரசால் விற்பனை மேற்கொள்ளப்படுகிறது.
உத்ராடம் நாளில்(திருவோணத்திற்கு முதல் நாள்) மாநிலத்திலுள்ள ஐந்து கடைகளில் மது விற்பனை ஒரு கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. கொல்லம் ஆசிரமத்திலுள்ள பெவ்கோ கடையில் அதிகளவில் மது விற்பனை நடந்துள்ளது. இங்கு ரூ.1.6 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. இரிங்கலக்குடா, சேர்ந்தால கோர்ட் சந்திப்பு, பையனூர், திருவனந்தபுரம் பவர்ஹவுஸ் ரோடு ஆகிய இடங்களில் உள்ள விற்பனை நிலையங்களிலும் அதிகளவில் விற்பனை நடந்துள்ளது.
பெவ்கோவில் புதிதாக நியமிக்கப்பட்ட எம்.டி. யோகேஷ் குப்தாவின் தலையீடு, முன்பு இருந்த மது பற்றாக்குறையை முழுமையாகத் தீர்த்துள்ளது. ஓணத்தின் போது மலிவான, பிரபலமான மதுபான பிராண்டுகளை எளிதில் கிடைக்கச் செய்தது இந்த விற்பனைக்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது. இதுவே இம்முறை மது விற்பனை அதிகரிக்க காரணம் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஈரோட்டில் இயங்கிய போலி மதுபான ஆலை - கும்பகோணத்தில் பிடிபட்ட வாகனம்