கோழிக்கோடு : கேரளாவில் மற்றொரு கோர சம்பவமாக பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்துச் சிதறியதில் இளைஞர் படுகாயம் அடைந்தார்.
கோழிக்கோடு மாவட்டம், பையனக்கல் பகுதியைச் சேர்ந்தவர், 23 வயதான பரிஸ் ரஹ்மான். இந்திய ரயில்வேயில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் வேலைக்குச் சென்ற பரிஸ் ரஹ்மான், பணியின் இடையே தனது முகத்தை கழுவிக் கொண்டு இருந்து உள்ளார்.
அப்போது திடீரென அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. செல்போனின் பேட்டரி வெடித்து சிதறியதாக கூறப்படும் நிலையில் அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டில் தீப்பற்றி உள்ளது. பரிஸ் ரஹ்மான் பேண்டில் தீப்பற்றியதைக் கண்ட நண்பர்கள் துரித நடவடிக்கையாக அணைத்தனர்.
காயங்களுடன் மீட்கப்பட்ட ரஹ்மான் அருகில் உள்ள பீச் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். பரிஸ் ரஹ்மானின் செல்போன் பேட்டரி வெடித்து தீப்பற்றியதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். 23 வயதான பரிஸ் ரஹ்மான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரியல்மி 8 (Realme 8) செல்போனை வாங்கி பயன்படுத்தி வந்து உள்ளார்.
இந்நிலையில் திடீரென செல்போனின் பேட்டரி வெடித்து விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. Realme நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் பரிஸ் ரஹ்மான் வழக்குத் தொடர திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி செல்போன் வெடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த ஆறாவடு மறைவதற்குள் மற்றொரு சம்பவமாக 23 வயது இளைஞர் செல்போன் பேட்டரி வெடித்து படுகாயம் அடைந்தது உள்ளார்.
திருச்சூர் மாவட்டத்தில் உள்ள திருவில்வமலை பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் - செளமியா தம்பதிக்கு ஆதித்யஶ்ரீ என்ற 8 வயது மகள் இருந்தார். ஆதித்யஶ்ரீ திருவில்வமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி ஆதித்யஶ்ரீ தந்தையின் செல்போனை அடிக்கடி எடுத்துப் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்பட்டது.
செல்போனில் விளையாடுவது, வீடியோ பார்ப்பது போன்றவற்றை ஆதித்யஸ்ரீ வழக்கமாக கொண்டு இருந்ததாகவும் அதை பெற்றோர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி தனது தந்தையின் செல்போனில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென செல்போன் வெடித்ததாக கூறப்படுகிறது.
படுகாய அடைந்த ஆதித்யஸ்ரீயை பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாகக் கூறினர். இந்நிலையில், கேரளாவில் மீண்டும் ஒரு செல்போன் விபத்து சம்பவம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : Karnataka Election: 'தன்னைப்பற்றிய வைரல் கடிதம்; பாஜகவின் சதிச்செயல்!' - சித்தராமையா குற்றச்சாட்டு!