கோழிக்கோடு : கேரள ரயிலுக்கு தீ வைப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லியைச் சேர்ந்த ஷாருக் ஷபியை ஏப்ரல் 20 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஆலப்புழா - கண்ணூர் எக்சிக்யூடிவ் விரைவு ரயிலில் கடந்த ஏப் 2 ஆம் தேதி மர்ம நபர் தீவைத்தார்.
ரயில் பயணிகள் மீதும் பெட்ரோல் ஊற்றி மர்ம நபர் தீ வைக்க முயன்றதாக கூறப்படுகிறது. நொடிப் பொழுதில் தீ ரயிலில் பரவிய நிலையில், அதே ரயிலில் பயணித்த பெண், இளைஞர், சிறுமி உள்ளிட்டோர் உயிரை காத்துக் கொள்ள ரயிலில் இருந்து வெளியே குதித்தனர். இந்த திடீர் தாக்குதலில் 9 பயணிகளுக்கு தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
தண்டவாளத்தில் கிடந்த மர்ம பையை பறிமுதல் செய்த போலீசார், அதில் இருந்த பொருட்களை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த யூடியூபர் ஷாருக் ஷபி என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். முகம் உள்ளிட்ட உடலின் பல்வேறு இடங்களில் ஷாருக் ஷபி காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் ஷபிக்கு எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் முடிவில் அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், கல்லீரல் செய்லாபடு குறித்த சோதனையில் ஷபிக்கு எந்த பிரச்சினை இல்லை எனக் கூறி மருத்துவர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்தனர். இதையடுத்து ஷபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து ஷாருக் ஷபியை சிறையில் போலீசார் ஒப்படைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஷாருக் ஷபியிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளதாகவும், போலீஸ் காவலில் எடுக்க நீதிமன்றத்தில் போலீசார் முறையிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி வரை ஷாருக் ஷபி நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : "உலக பொருளாதாரத்தை நிர்வகிக்கும் இந்தியா, சீனா" - சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்!