திருவனந்தபுரம் : கேரளாவில் உயர்கல்வி நிறுவனங்கள் அக்டோபர் 4ஆம் தேதி முதல் தொடங்கும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை (செப்.7) தெரிவித்தார்.
மாநிலத்தில் கோவிட் ஆய்வு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், “தொழில்நுட்பம், பாலிடெக்னிக், மருத்துவம், பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பு இறுதி ஆண்டு வகுப்புகள் அக்டோபர் 4 முதல் தொடங்கும் என்று கூறினார். மேலும் மாணாக்கர்கள் வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.
![Kerala to reopen colleges](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/covishield_3108newsroom_1630417659_718.jpg)
தொடர்ந்து அவர் கூறுகையில், “மேற்கூறிய வகையைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் இந்த வார இறுதிக்குள் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும். வரும் நாள்களில் இது குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் தெளிவுபடுத்தும். மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள இரவு ஊரடங்கு உத்தரவையும் திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது.
முன்னதாக அரசு காலை 10 மணி முதல் அதிகாலை வரை இரவு ஊரடங்கு உத்தரவை விதித்திருந்தது. தற்போது ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு திரும்ப பெறப்படுகிறது” என்றார்.
![Kerala to reopen colleges](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/kerala-high-court_3108newsroom_1630401994_1036.jpg)
இதையடுத்து, “முதல் டோஸை எடுத்து கொண்டவர்கள் அடுத்த 4 வாரங்களுக்குள் கோவிஷீல்டின் இரண்டாவது டோஸை எடுத்துக் கொள்ளலாம் என்ற கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவுடன் மாநில அரசு முழு உடன்பாட்டில் இருந்தது. இது தொடர்பாக மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும்” என்று பினராயி விஜயன் கூறினார்.
எனினும் மாநிலத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊடரங்கு தொடர்கிறது. அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. கேரளத்தில் ஒருபுறம் கரோனா வைரஸ் பெருந்தொற்று அதிகரித்துவருகிறது. மறுபுறம் நிபா வைரஸ் வேறு அச்சுறுத்திவருகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தாலிபான்களுடன் பேசும் பாஜக, விவசாயிகளிடத்தில் பேச மறுப்பதேன்- காங்கிரஸ்!