கோழிக்கோடு: கன்னடத்தில் கடந்த ஆண்டு வெளியான "காந்தாரா" திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை இயக்கி நடித்திருந்தார் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படம் தமிழ், தெலுங்கு, மளையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. கன்னடத்தைப் போலவே பிற மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்று, வசூலிலும் இப்படம் சாதனைப் படைத்தது. 100 நாட்கள் ஓடிய காந்தாரா சுமார் 400 கோடி ரூபாய் வசூலித்ததாகத் தெரிகிறது.
இதற்கிடையில் காந்தாரா படத்தில் இடம்பெற்றுள்ள "வராஹ ரூபம்" என்ற பாடல் தங்களது நவரசம் ஆல்பத்திலிருந்து திருடப்பட்டுள்ளதாக கேரளாவைச் சேர்ந்த "தாய்க்குடம் பிரிட்ஜ்" (Thaikkudam Bridge) என்ற இசைக்குழுவினர் கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வராஹ ரூபம் பாடலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரினர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் திரையரங்குகள் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சில ஆப்களிலும் பாடலை ஒளிபரப்பத் தடை விதித்தது. இந்த வழக்கில் காந்தாரா பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் இருவரும் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கில் தீர்ப்பு வரும்வரை வராஹ ரூபம் பாடலை ஒளிபரப்பக் கூடாது என்றும், இருவரும் நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறாமல் நாட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் நிபந்தனைகளை விதித்தது.
இந்த நிபந்தனைகளை எதிர்த்து இயக்குநரும், தயாரிப்பாளரும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், "தீர்ப்பு வரும்வரை வராஹ ரூபம் பாடலை ஒளிபரப்பக் கூடாது" என்ற உயர் நீதிமன்றத்தின் நிபந்தனைக்கு தடை விதித்தது. அதேநேரம் இருவரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காந்தாரா இயக்குநர் ரிஷப் ஷெட்டி, தயாரிப்பாளர் விஜய் கிர்கந்தூர் இருவரும் நேற்று(பிப்.12) கோழிக்கோடு நகர காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகினர். விசாரணை அதிகாரி முன்பு ஆஜரான அவர்களிடம், வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி உடன் யஷ், ரிஷப் ஷெட்டி சந்திப்பு