திருவனந்தபுரம் (கேரளா): கேரளா முன்னாள் எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ் மீது நேற்று (ஜூலை 2) பெண் ஒருவர் மியூசியம் காவல்நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்தார். இதையடுத்து பி.சி.ஜார்ஜ் கைது செய்யப்பட்ட நிலையில், 24 மணிநேரத்தில் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்.
கேரள மாநிலம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், கேரள ஜனபக்ஷம் (மதச்சார்பற்ற) கட்சி தலைவர் பி.சி.ஜார்ஜ். இவர் மீது நேற்று (ஜூலை 2) காலை சோலார் பேனல் ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பெண் மியூசியம் காவல்நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்தார். இதையடுத்து காவல்துறையினர் புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு, வழக்குப்பதிவு செய்து சில மணி நேரத்தில் ஜார்ஜ்யை கைது செய்தனர்.
இதையடுத்து திருவனந்தபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜார்ஜ், ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜார்ஜுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜார்ஜ், "முதலமைச்சர் பினராயி விஜயன் தொழிலதிபர் பாரிஸ் அபூபக்கருடன் தொடர்பில் உள்ளது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும்.
முதலமைச்சரின் மகள் வீணா விஜயனின் 'எக்ஸாலாஜிக்' நிறுவனம் மாநில மக்களின் தரவுகளை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளது. பினராயி விஜயன் அடிக்கடி அமெரிக்கா சென்று வருவது சந்தேகமளிக்கிறது" எனக் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: இஸ்லாமியர்களுக்கு எதிராக சர்ச்சை பேச்சு - கேரள முன்னாள் எம்எல்ஏ கைது!