கரோனா தொற்று அதிகளவில் பரவிவரும் நிலையில் கேரள மாநிலத்தில் அனைத்து மதுபான நிலையங்களும் அடுத்த அறிவிப்பு வரும்வரை இயங்கக் கூடாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், அரசுக்குச் சொந்தமான பெவ்கோ என்னும் மதுபானங்கள் விற்பனை நிறுவனமும் மூட தயாராக இருக்கிறது.
கடந்தாண்டு கரோனா தொற்றின் தாக்கம் இருந்த நிலையில், மதுபானங்களை வீட்டிற்கே விநியோகம் செய்வதற்கான முயற்சிகளை இந்நிறுவனம் கையில் எடுத்தது. ஆனால், இந்தத் திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்புகள் வந்தன. பின்னர், ஒரு இனையதள பயன்பாட்டின் மூலம் ஒருவரது தேவையை முன்பதிவு செய்யும் புதுமையான யோசனையை செய்தனர்.
பயன்பாட்டில் பல குறைபாடுகள் இருந்தாலும், கரோனா பாதிப்பு குறைந்தபோது இந்தத் திட்டம் செயல்பட்டுவந்தது. தற்போது, இரண்டாவது அலை உச்சத்தை அடைந்துள்ளதால், மாநிலம் முழுவதும் அரசு நடத்தும் பெவ்கோ நிறுவனத்தின் மூலம் 301 சில்லறை மதுபான கடைகள் இயங்கவுள்ளன. மேலும், 576 பார்கள், 291 ஒயின், பீர் கடைகள் இயங்கவுள்ளன.
மாநிலத்தில் உள்ள 3.34 கோடி மக்களில் சுமார் 32.9 லட்சம் பேர் மதுபானம் அருந்துபவர்கள். இதில் 29.8 லட்சம் ஆண்கள், 3.1 லட்சம் பெண்கள் அடங்குவர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
கேரளாவில் சுமார் ஐந்து லட்சம் பேர் தினசரி மதுபானம் அருந்துகின்றனர். இதில், 1,043 பெண்கள் உள்பட சுமார் 83 ஆயிரத்து 851 பேர் மதுவுக்கு அடிமையாகி இருப்பதாகவும் மாநில அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நிதி பற்றாக்குறையுள்ள கேரளா, மதுபானம், பீர் விற்பனையில் மிகப்பெரிய வருவாயை ஈட்டிவருகிறது. கடந்த நிதியாண்டில் அது 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியது. எனவே கேரள அரசுக்கு மதுப்பிரியர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.