கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அயிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஹ்மான்(34). இவர் தனது காதலியைப் பெற்றோருக்குத் தெரியாமல் 10 ஆண்டுகளாக வீட்டில் உள்ள சிறிய அறையில் மறைத்து வைத்திருந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எப்படி இத்தனை நாள்களாக ஒரே வீட்டில் மறைத்து வைக்க முடிந்தது என்பது இளைஞரின் குடும்பத்தினருக்கே அதிர்ச்சியாக உள்ளது.
ரஹ்மான் - சாஜிதா இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். 10 ஆண்டுகளுக்கு முன்பு சாஜிதா மாயமாகியுள்ளார். இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டிருந்து.
அப்போது ரஹ்மான் உள்பட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் காவல்துறை சாஜிதா குறித்து விசாரணை நடத்தினர். இருப்பினும், எவ்வித தகவலும் கிடைத்திடவில்லை.
ரஹ்மானின் வீடு சாஜிதா வீட்டிலிருந்து 100 மீட்டருக்குள் தான் உள்ளது. முதலில் காதலியை வீட்டில் தங்க வைத்த ரஹ்மான, சிறிது நாள்களில் பெற்றோரிடம் சொல்லி விடலாம் என நினைத்துள்ளார். ஆனால், வீட்டிலிருந்த நிதி நெருக்கடியாலும், பயத்தினாலும் அதனை மறைத்துள்ளார்.
ஆனால், ரஹ்மானின் நடவடிக்கைகள் விசித்திரமாக இருப்பதை குடும்பத்தினர் பார்த்துள்ளனர். பல நேரங்களில் அறையிலே தஞ்சம் அடைந்துள்ளார்.
இரவில் மட்டும் கழிவறை செல்வேன்
எலக்ட்ரீசனான ரஹ்மான், தனது அறைக்கு ஒரு சிறப்புப் பூட்டு அமைப்பை ஏற்பாடு செய்து இருந்தார். அவர் சில மின்சாரக் கம்பிகளைக் கதவுக்கு வெளியே வைத்து, அவரது குடும்ப உறுப்பினர்களைத் தொடக்கூடாது என்று கூறி இருந்தார்.
அவர் அனுமதியின்றி யாரும் அறைக்குள் செல்லக்கூடாது. தினமும் காதலிக்கு உணவும், சாப்பாடும் வழங்கி வந்துள்ளார். அறையில் சிறிய தொலைக்காட்சி ஒன்றும், வைத்திருந்தார். ஆனால், கழிவறை வசதி மட்டும் இல்லையாம்.
இதன் காரணமாக, கழிப்பறையைப் பயன்படுத்த இரவில் மட்டுமே வெளியே செல்வாராம். அவர் கம்பிகளை அகற்றிவிட்டு ஜன்னலுக்கு வெளியே குதித்து வீட்டிற்கு வெளியே உள்ள குளியலறைக்குச் செல்வாராம்.
அவர் நோய்வாய்ப்பட்டால், ரஹ்மான் மருந்துகளைக் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. ரஹ்மான் வீட்டிலிருந்தபடியே அவரது பெற்றோரையும் பார்த்து ரசித்ததாகச் சொல்லப்படுகிறது.
ரகசிய காதலியுடன் வெளியேறிய ரஹ்மான்
இந்நிலையில், கரோனா ஊரடங்கால் வேலைக்கு செல்லமுடியாத ரஹ்மான் தவித்துள்ளார். செலவுக்குப் பணம் இல்லாத காரணத்தினால் பெற்றோருக்கு தெரியாமல் காதலியுடன் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
இருவரும், பாலக்காட்டில் உள்ள விதானசேரி கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்குத் தங்கி வந்துள்ளனர். மகனைக் காணவில்லை என ரஹ்மான் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இதற்கிடையில், நென்மாரா பகுதியில் ரஹ்மானை அவரது சகோதரர் பார்த்துள்ளார். பின்னர் காவல் துறை உதவியுடன் அவர்களை கண்டுபிடித்த குடும்பத்தினர், விசாரணை நடத்தினர். அதில் தான், அதிர்ச்சி கதை வெளிவந்துள்ளது.
காவல் துறையினர் இரண்டுபேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் அப்போது, ஒன்றாக வாழ அப்பெண் விருப்பம் தெரிவித்ததால், ரஹ்மானுடன் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.
இந்த விசித்திரமான கதையில் பல கேள்விகளின் பதில்கள் வியப்பைத் தான் ஏற்படுத்துகிறது.