திரிசூர்: திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பிரதீஷ் என்பவர் நீண்ட காலமாக ஹெபடோசெல்லுலர் கார்சினோமா(Hepatocellular carcinoma) என்ற நாள்பட்ட கல்லீரல் சிதைவு நோய் எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது.
பிரதீஷ்க்கு பொருத்தமான கல்லீரல் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் உள்ளதா என பரிசோதித்த போது, சரியான பொருத்தம் அமையவில்லை. இருப்பினும் பிரதீஷின் 17 வயது மகள் தேவானந்தாவின் கல்லீரல் அவரது தந்தைக்கு பொருந்துவதாகவும், அவர் கல்லீரல் தானம் அளிக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றுச் சட்டம், 1994 அடிப்படையில் 18 வயது நிரம்பாதவர்கள் உறுப்பு தானம் அளிக்க கூடாது என்பதால், கேரள உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரி ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி வி.ஜி. அருண் கூறுகையில், 'தேவானந்தாவை மகளாக பெற்றவர்கள் அதிர்ஷடசாலிகள்" எனப் பாராட்டினார். மேலும் ஐந்து மாதத்தில் வேதாந்தாவிற்கு 18 வயது நிரம்ப இருப்பதால் கல்லீரலின் ஒரு பகுதியை மட்டும் தானமாக வழங்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.