திருவனந்தபுரம்: தமிழ்நாடு - கேரள எல்லையான பாறசாலையைச் சேர்ந்தவர், சாரோன் ராஜ். 23 வயதான சாரோன் ராஜ் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன் உடல் நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாரோன் ராஜ் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடைசியாக காதலி கிரீஷ்மா வீட்டிற்குச் சென்ற பின்னரே உடல் நலக்கோளாறால் சாரோன் அவதிப்பட்டதாகவும், கிரீஷ்மாவை தீர விசாரிக்குமாறு சாரோன் ராஜின் தந்தை ஜெயராமன் போலீசில் புகாரளித்தார். திருவனந்தபுரம் குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில், போலீசாரின் தீவிர விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
காதலன் சாரோன் ராஜூக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கிரீஷ்மா கொலை செய்தது அம்பலமானது. காதலி கிரீஷ்மாவை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்து விஷ பாட்டில் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களைக் கைப்பற்றினர். மேலும் கொலைக்கு உதவியதாக கிரீஷ்மாவின் தாய் சிந்து, தாய்மாமா நிர்மல் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
கிரீஷ்மாவை நீதிமன்றக்காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் மேலும் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளன. காதலன் சாரோனை கொல்ல கடந்த 2 மாதங்களாக திட்டமிட்டதாகவும், 10 முறை கொலை முயற்சி மேற்கொண்டதாகவும் கிரீஷ்மா தெரிவித்துள்ளார்.
மேலும் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்யவே, சாரோனிடம் ஜாதகப்பொருத்தம் இல்லை உள்ளிட்ட பல்வேறு சாக்கு போக்குகளை கூறியதாகவும் கூறியுள்ளார்.மேலும் தன் திருமண வாழ்க்கைக்கு சாரோன் இடையூறாக இருக்கலாம் என்றும், காதலித்தபோது ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றிய இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக்காட்டி மிரட்டுக்கூடும் என எண்ணி அவரை கொலை செய்யத்திட்டமிட்டதாகவும் கிரீஷ்மா கூறியுள்ளார்.
ஜூஸ் சேலஞ்ச் என்ற பெயரில் குளிர்பான பாட்டிலில் திட்டமிட்டு விஷத்தை கலந்துகொடுத்து கொன்றதாக கிரீஷ்மா வாக்குமூலம் வழங்கி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சாரோனுடன் சேர்ந்து சுற்றிய இடங்களுக்கு கிரீஷ்மாவை அழைத்துச்சென்ற போலீசார், குளிர்பானத்தில் விஷமருந்தை கலந்தது எப்படி என்பதை கிரீஷ்மாவை நடித்து காட்டச்சொல்லி பதிவு செய்து கொண்டனர். மேலும் சாரோனின் கல்லூரி மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவி குடும்பத்தை பழிவாங்க திட்டம்...கடத்தப்பட்டதாக நாடகம் ஆடியவர் கைது