60 வயதுக்கு மேலானவர்கள் அனைவரும் மார்ச் 1ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினர் தடுப்பூசி போட்டு கொண்டனர். அந்த வரிசையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு திருவனந்தபரத்தில் உள்ள மாவட்ட சுகாதாரதுறை அலுவலகத்தில் இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதுகுறித்து பினராயி விஜயன் கூறுகையில், "கரோனா தடுப்பூசி போட்டு கொண்டது நல்ல அனுபவம். மற்ற தடுப்பூசி போல் அல்லாமல் உடலில் ஊசி செலுத்தப்படும்போது வரும் வலி கூட தெரியவில்லை. கரோனா தடுப்பூசி பணி எப்போது முடியும் என்பது யாருக்கும் தெரியாது. பின்னர், அரை மணி நேரம் ஓய்வு எடுத்துள்ளேன். உடலில் எந்த அசவுகரியமும் ஏற்படவில்லை. தடுப்பூசி போட்டு கொண்ட மற்ற அமைச்சர்களும் இதே அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
பல வைரஸ்களிலிருந்து மனித இனத்தை காப்பாற்றியது தடுப்பூசியே ஆகும். தடுப்பூசிக்கு எதிராக பலர் பரப்புரை மேற்கொள்வதால் நான் இந்த கருத்தை தெரிவிக்கிறேன். தடுப்பூசி போட்டு கொள்ள நீங்கள் தயங்கினால் அது சமூகத்திற்கான அச்சுறுத்தல், அநீதியே ஆகும்" என்றார்.