எர்ணாகுளம் : கேரளா மாநிலம், எர்ணாகுளம் அடுத்த களமச்சேரி பகுதியில் உள்ள ஜம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் இன்று (அக். 29) காலை நடைபெற்ற மதவழிபாட்டு பொது நிகழ்ச்சியில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 36க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தொடர்க் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரளா மாநில முதலமைச்சர் பிரனாயி விஜயனிடம் கேட்டு அறிந்து கொண்டார். மேலும், சம்பவ இடத்திற்கு என்.எஸ்.ஐி (NSG) மற்றும் என்.ஐ.ஏ (NIA) சென்று விசாரணையை உடனடியாக தொடங்கும் எனத் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சம்பவ இடத்தில் கேரளா காவல் துறையினர் மற்றும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையைத் துவக்கினர்.
கேரளா தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மதவழிபாட்டு பொதுக் கூட்டம் நடைபெறும் மையத்திற்கு நீல நிற கார் ஒன்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு முன்பு அந்த கார் அப்பகுதியில் இருந்து வெளியே சென்றதாகத் தெரிகிறது.
மேலும், அந்த நீல நிறக் காரில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு தொடர்புடையவர்கள் மத வழிப்பாட்டு பொதுக் கூட்டத்திற்கு வந்திருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணையைத் துவக்கினர். மேலும் நீல நிறக் காரில் ஒட்டப்பட்டு இருந்த எண் போலியானது எனக் காவல் துறையினர் கண்டறிந்து உள்ளனர்.
இந்த நிலையில், களமச்சேரி தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு நான் தான் காரணம் எனக் கூறி டொமினிக் மார்ட்டின் என்ற நபர் திருச்சூர் கொடகரா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சரியாக இன்று (அக். 29) மதியம் 1.30 மணிக்கு திருச்சூர் கொடகரா காவல் நிலையத்தில் மார்ட்டின் சரண் அடைந்துள்ளார்.
டொமினிக் மார்ட்டின் இடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஏடிஜிபி தலைமையிலான உயர்மட்ட காவல் அதிகாரிகள் கொடகரா காவல் நிலையம் சென்று அவரை கைது செய்து ரகசிய இடத்தில் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.
குண்டு வெடிப்பு சம்பவத்தில் சரணடைவதற்கு முன் டொமினிக் மார்ட்டின் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ பதிவில், "யோகோவா சாட்சி குழு கற்றுக் கொடுப்பவை தனக்குப் பிடிக்காததால் குண்டு வைத்ததாகவும், பள்ளிகளில் தேசிய கீதம் பாடுவது தவறு என யோகோவா சாட்சி குழு கற்றுத் தருகிறது எனவும், யோகோவா சாட்சி குழுவைத் தவிர மற்ற அனைவரும் மோசமானவர்கள் எனவும் கூறி வருகின்றனர்.
தேசிய கீதத்தைப் பாடக்கூடாது என கற்றுக் கொடுக்கும் குழுவில் வளரும் குழந்தை எதிர்காலத்தில் என்னவாகும் எனக் கேள்வி எழுப்பி அந்த கூட்டத்திற்கு வரும் அனைவரும் தேசத்திற்கு எதிரானவர்கள் எனவே அவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும் என்பதால் குண்டு வைத்ததாக" அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கேரளா குண்டுவெடிப்பு: சிசிடிவி காட்சியில் சிக்கிய நீல நிறக் கார்! என்.ஐ.ஏ. தீவிர விசாரணை!