பனாஜி: கோவாவில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. கோவாவில் தற்போது ஆட்சிசெய்து வரும் பாஜக, எதிர்க்கட்சிக்களான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி போன்றவை தற்போது இருந்தே தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் வடக்கு கோவாவில் உள்ள மபுசா நகரத்தில் இன்று (செப். 21) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது கூறிய அவர், "கோவாவில் அரசு வேலைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கத் திட்டம் தீட்டப்படும். இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக தனியே ஒரு பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டம் உள்ளது.
வாக்குறுதிகள்
கோவாவில், குடும்பத்தில் வேலையில்லாமல் இருக்கும் ஒருவருக்கு வேலைவாய்ப்பு உறுதிபடுத்தப்படும். வேலை கிடைக்கும் வரை, வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.3,000 வழங்கப்படும். தனியார் துறையில் கோவா இளைஞர்களுக்கு 80 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க வழிவகைச் செய்யப்படும்.
கரோனா பெருந்தொற்றால் கோவாவில் சுற்றுலாத்துறை மிகவும் பாதிப்படைந்துள்ளது.
சுற்றுலாத்துறை சார்ந்த பல குடும்பங்கள் வேலையின்றி இருக்கின்றன. மேலும், சுரங்கத்தைச் சார்ந்துள்ள பல குடும்பங்களும் வறுமையில் வாடுகின்றன. அதனால், சுற்றுலாத்துறை, சுரங்கங்கள் சார்ந்த குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவில் புதிதாக 26 ஆயிரம் பேருக்கு கரோனா