புட்கம் (காஷ்மீர்): ஜம்மு- காஷ்மீர் யூனியனின் மத்திய மாவட்டமான புட்கம் வரலாற்று சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியுள்ளது. அந்த வகையில் நாட்டில் லட்சத்தீவுக்கு அடுத்தப்படியாக காசநோயாளிகள் அற்ற மாவட்டமாக புட்கம் உருவாகியுள்ளது.
நாட்டில் காசநோயாளிகள் அற்ற மாவட்டம் என்ற தகுதியை பெற 65 மாவட்டங்கள் விண்ணப்பித்திருந்தன. இதில், காசநோயாளிகள் இல்லாத மாவட்டமாக காஷ்மீரின் புட்கம் தேர்வாகியுள்ளது. நாட்டில் தற்போது காசநோய் குறித்து பல்வேறு வகையிலும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுவருகின்றன.
2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காசநோயாளிகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்ற தாரக மந்திரத்தை முன்னிறுத்தி இந்த விழிப்புணர்வு பரப்புரைகள் நடந்துவருகின்றன. இது தொடர்பான பரப்புரைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தப் பரப்புரையில் ஈடுபடும் சுகாதாரத் துறை அலுவலர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஐந்தாண்டுக்குள் காசநோயை குறைக்கும் மாவட்டங்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
அந்த வகையில் மாவட்டத்தில் காசநோயாளிகளின் எண்ணிக்கை 20 விழுக்காடு குறைத்தால் வெண்கலப் பதக்கமும், 40 விழுக்காடு குறைத்தால் வெள்ளி பதக்கமும், 60 விழுக்காடு குறைத்தால் தங்கப் பதக்கமும் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில் தற்போது புட்கம் மாவட்டம் மட்டுமே காசநோய் குறைப்பில் தங்கப் பதக்கம் பெற்றதுடன், காசநோயாளிகள் இல்லாத மாவட்டம் என்ற தனிச்சிறப்பையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், காசநோய் அற்ற மாவட்டம் என்ற விருதை பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது என மாவட்டத்தின் காசநோய் தடுப்பு அரசு மருத்துவர் அட்ஃபர் யாசீன் கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில், இது எங்களுக்கு பெருமை அளிக்கக் கூடிய விஷயம். கடந்த ஐந்தாண்டுகால தொடர் முயற்சியின் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது. காசநோயிக்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும். காசநோய், அதன் கட்டுப்பாடு குறித்து நாங்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்” என்றார்.
இதையும் படிங்க : கோவிட்-நெருக்கடி: பேராபத்தில் இந்திய காசநோயாளிகள்!