கொப்பல் (கர்நாடகா): கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிஷ்கிந்தா அனுமன் பிறந்த இடம் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார். பாஜகவின் பாரத தர்ஷன் யாத்திரையின் (Bharat Darshan Yatra) ஒரு பகுதியாக கிஷ்கிந்தாவிற்கு சென்று வழிபாடு செய்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி, கர்நாடகா மாநிலம் விஜயநகர் மாவட்டத்தில் உள்ள அனேகோண்டி அருகே உள்ள அஞ்சனாத்ரி மலை தான் அனுமன் பிறந்த இடம். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றார்.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலை அனுமன் பிறந்த இடம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) கூறிவரும் நிலையில், மற்றவர்கள் வேறுவிதமாகக் கூறினாலும் கிஷ்கிந்தா தான் அனுமன் பிறந்த இடம் என்றார்.
மேலும், இந்த யாத்திரையின் போது, ஆயிரக்கணக்கான இடங்கள் இந்து புனித நூலான ராமாயணத்தில் குறிப்பிடும் இடங்கள் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அனுமன் பிறந்த இடம் எது? : வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது படி அனுமன் பிறந்த இடம் கர்நாடகா மாநிலத்திற்கு அருகில்தான் வரையறுக்கப்படுகிறது. அது கிஷ்கிந்தா தான். இது சிறந்த சான்றாக செயல்படுகிறது. அஞ்சனாத்ரி மலை பகுதியை மேம்படுத்த கர்நாடகா அரசு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றார்.
அனுமன் பிறந்த இடம் எது என்று நீண்ட காலமாகவே ஆந்திரா பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் தங்கள் மாநிலம் தான் என்று சொந்தம் கொண்டாடி வருகின்றன. இரு மாநிலச் சேர்ந்த அறக்கட்டளைகளும் சொந்தம் கொண்டாடுகின்றனர்.
ஆந்திராவில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ அனுமன் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை. திருப்பதியில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறுகிறது.
ஆனால் கர்நாடகா அறக்கட்டளை கிஷ்கிந்தா தான் அனுமன் பிறந்த இடம் என்று கூறி வருகிறது. இந்தநிலையில், பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கர்நாடகாவின் கிஷ்கிந்தா தான் அனுமன் பிறந்த இடம் என்று கூறி இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ராகுல் காந்திக்கு தன் சொத்து முழுவதையும் எழுதிவைத்த மூதாட்டி - காரணம் என்ன தெரியுமா?