பெங்களூரு (கர்நாடகம்): ஊரடங்கு விதிமுறைகளை வகுப்பது குறித்து முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், ஜூன் 20ஆம் தேதி வரை அமலில் இருக்கும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், அடுத்தக்கட்ட அறிவிப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தை அடுத்து ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவான தொற்று பாதிப்பு இருக்கும் 16 மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
பெங்களூரு நகர்ப்புறம், உத்தர கன்னடம், பெலகாவி, மாண்டியா, கோப்பல், சிக்பல்லாபூர், துமகுரு, கோலார், கடக், ரைச்சூர், பாகல்கோட், கலாபுராகி, ஹவேரி, ராமநகர, யாத்கீர், பிதர் ஆகிய மாவட்டங்கள் இதில் அடங்கும்.
மேற்கூறப்பட்ட மாவட்டங்களில் அனைத்து விதமான கடைகள், அலுவலகங்களைத் திறக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், 50 விழுக்காடு பணியாளர்கள், மாலை 5 மணி வரை மட்டுமே இயக்கம் என்ற வரம்பை கடைபிடிக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதைத்தவிர மைசூரு மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வுகளின்றி தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான பொதுப் போக்குவரத்துகளும் 50 விழுக்காடு பயணிகளைக் கொண்டு இயங்கும் என்றும் அரசு தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக இருந்த இரவு நேர ஊரடங்கு மட்டும் (இரவு 7 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை) மாநிலம் முழுவதும் அமலில் இருக்கும் என்பது நினைவுக்கூரத்தக்கது.