திருவனந்தபுரம் (கேரளா): கர்நாடக மாநில தட்சின கன்னடா - கேரளா எல்லை வழிச்சாலை இன்று (பிப்.22) காலை முதல் மூடப்பட்டது.
கேரள மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பரவலால், மங்களூரு உள்ளிட்ட கர்நாடக எல்லைக்குள் வரும் கேரளப் பயணிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகளைக் கர்நாடக அரசு விதித்துள்ளது. கரோனா இல்லை எனச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பயணிகள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் மங்களூரு சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.
தட்சின கன்னடா - கேரளா எல்லை வழிச்சாலையும் இன்று காலை முதல் மூடப்பட்டது. 72 மணி நேரத்துக்கு முன் கரோனா இல்லை எனப் பரிசோதனை முடிவுச் சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனக் கர்நாடக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
காசர்கோடு பகுதி மக்கள் சிறப்பு மருத்துவச் சிகிச்சைக்கும், உயர்ந்த தரத்திலான மருத்துவமனைகளுக்கும் மங்களூருக்குத்தான் சென்று வருகிறார்கள். ஆபத்தான நிலையில் நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்குச் செல்ல வேண்டுமென்றால்கூட, கரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.