பாகல்கோட்: கர்நாடகா மாநிலம், ரப்கவி பனஹட்டி நகரைச்சேர்ந்த குரு என்ற மாணவர், பெல்காமில் உள்ள கேஎல்எஸ் கோகேட் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற தன்னாட்சிக்கல்லூரியில் பொறியியல் படித்தார். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறை மாணவரான இவர், கேம்பஸ் இன்டர்வியூவில் சாம்சங்கின் செமிகண்டக்டர் ஆராய்ச்சி நிறுவனமான எஸ்எஸ்ஐஆர் (SSIR)-ல் ஆண்டுக்கு சுமார் 21 லட்சம் ரூபாய் ஊதியத்தில் வேலைவாய்ப்பைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
இந்தக் கல்லூரியில் கடந்த 43 ஆண்டுகளில் இந்த அளவு ஊதியத்துடன் எந்த மாணவருக்கும் வேலை கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. மேலும் ஏழை நெசவாளர் குடும்பத்தைச்சேர்ந்த மாணவர் குரு, வறுமையிலும் நன்றாகப்படித்து இந்த வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளது மிகப்பெரிய சாதனைதான்.
இதுகுறித்து பேசிய மாணவர் குரு, "வறுமையில் இருந்த எனக்கு, இலக்கை அடைய அரசின் கல்வி உதவித்தொகை மற்றும் கல்விக்கடன் உதவியாக இருந்தது. மாணவர்கள் எதைக் கற்க விரும்பினாலும் அதற்கு பெற்றோர் ஒத்துழைக்க வேண்டும். என்னை கல்லூரியில் சேர்க்க, ஜவுளித்தொழில் செய்யும் சித்தானந்த பெலகாலி என்பவர், எனது தந்தைக்கு நிதியுதவி செய்து உதவினார். அவருக்கும் மனதார நன்றி கூறுகிறேன்" என்று தெரிவித்தார்.