தட்சிணக் கன்னடா (கர்நாடகா): தட்சிணக் கன்னடா மாவட்டத்தின் மங்களூரு நகரில் உள்ள கல்லூரிக்கு சில மாணவிகள் இன்று(மே 30) ஹிஜாப் அணிந்து வந்ததையடுத்து, கல்லூரி நிர்வாகம் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர். மங்களூருவில் உள்ள கல்லூரிக்கு இன்று 12 மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர்.
கல்லூரி நிர்வாகம் அவர்களை வகுப்புக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி, ஹிஜாப்யை அகற்றுமாறு கூறி உள்ளனர். அவர்கள் ஹிஜாப்யை அகற்ற மறுத்த நிலையில், அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதையடுத்து, மாணவிகள் தட்சிண கன்னடா மாவட்ட ஆணையர் ராஜேந்திரன் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளித்தனர். அதில், ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்குமாறு கல்லூரி நிர்வாகத்திற்கு ஆணையர் உத்தரவிட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் உடுப்பியில் உள்ள பெண்கள் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு போராட்டம் நடத்தப்பட்டது. உடுப்பியில் ஆறு மாணவிகள் தொடங்கிய போராட்டம், பின்பு மாநிலம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்தது.
ஹிஜாப்புக்கு ஆதரவாகவும், அதை எதிர்த்தும் மாணவர்களிடையே போராட்டம் வலுத்தது. சர்வதேச அளவிலும் ஹிஜாப் பிரச்சனை பேசு பொருளானது. இதையடுத்து வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிந்து வர அனுமதி கோரி மாணவிகள் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு, கல்வி நிலையங்களில் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடை அணிந்து வர தடை விதித்து, மாநில அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டனர். மேலும் ஹிஜாப் அணிவது இஸ்லாமியத்தில் கட்டாயம் இல்லை என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, கர்நாடகா அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடை அணிந்து வர கூடாது என்றும் சீருடை கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்று தெரிவித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
இதையும் படிங்க: ஹிஜாப் மறுப்பு : உச்ச நீதிமன்றத்தில் இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் முறையீடு!