பெங்களூரு: கர்நாடகாவில் ஓலா, உபர், ரேபிடோ உள்ளிட்ட ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனங்கள், அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அதிக கட்டணம் வசூலிக்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய கர்நாடக அரசு உத்தரவிட்டது.
இதற்கு டாக்ஸி ஓட்டுநர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆட்டோக்களை பறிமுதல் செய்யும் அரசின் நடவடிக்கையை கண்டித்தும், ஓலா, உபர் நிறுவனங்களுக்கு எதிராகவும், ஆட்டோ ஓட்டுநர்கள் நேற்று(அக்.11) போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் இந்த பறிமுதல் நடவடிக்கையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், ஓலா, உபர், ரேபிடோ ஆகிய நிறுவனங்கள் இன்று(அக்.12) முதல் ஆட்டோ சேவையை நிறுத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆப்கள் மூலம் ஆன்லைனில் ஆட்டோக்களை முன்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் என்றும், தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கர்நாடக போக்குவரத்து ஆணையர் டி.எச்.எம். குமார் தெரிவித்தார். ஆட்டோ மற்றும் டாக்ஸி உரிமையாளர்கள் அரசின் அனுமதி பெற்று வாகனத்தை இயக்கலாம் என்றும், அதேநேரம் ஆன்லைன் ஆப்கள் மூலம் இயக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.
முன்னதாக தசரா பண்டிகை காலத்தில் அதிகப்பணம் வசூலிப்பதாக எழுந்த புகாரில், இந்த சேவைக்கு தற்காலிகத்தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.