கர்நாடகா: கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பாஜகவுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர்கள், பாஜக தேசியத் தலைவர்கள் மற்றும் கர்நாடக பாஜக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திரமோடி கடந்த வாரம் பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், பிரதமர் நரேந்திரமோடி கர்நாடகாவில் இன்று(மே.5) முதல் மீண்டும் தனது சூறாவளிப் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இன்று டெல்லியிலிருந்து கர்நாடகாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடி, பிற்பகலில் பல்லாரியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மாலையில் தும்குரு மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி நாளை பெங்களூருவில் பிரசாரம் செய்கிறார். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சாலையில் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார். ஜேபி நகரில் தொடங்கி மல்லேஸ்வரம் வரையில் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரிக்கவுள்ளார். அதன் பின்னர், பாகல்கோட் மாவட்டத்துக்குச் செல்லும் மோடி, மாலை 4 மணிக்கு நடைபெறும் பாஜக பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பிறகு, இரவு 7 மணிக்கு ஹாவேரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார். அதைத் தொடர்ந்து பிரதமர் ஹூப்ளி சென்று இரவு அங்கு தங்குகிறார்.
இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி வரும் 7ஆம் தேதி பெங்களூருவில் இரண்டாவது நாளாக தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடர்கிறார். இதில், காலை 10 மணி முதல் 11.30 வரையில், சுரஞ்சன் தாஸ் சாலையில் இருந்து டிரினிட்டி சாலை வரை திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரிக்கிறார். அதன் பின்னர், மாலை 4 மணிக்கு ஷிவமோகாவிலும், இரவு 7 மணிக்கு மைசூரு நஞ்சன்கூடிலும் நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார். அங்கு பிரசாரக் கூட்டம் முடிந்ததும், நஞ்சன்கூடில் உள்ள ஸ்ரீகண்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்று சிறப்புப் பூஜை செய்யவுள்ளார். அதன் பிறகு பிரதமர் மோடி டெல்லி புறப்படுகிறார்.
இதையும் படிங்க: 'தீவிரவாதத்தை தோலுரித்துக் காட்டும் 'The Kerala Story': பிரதமர் மோடி பேச்சு!
இதையும் படிங்க: 'தி கேரளா ஸ்டோரி' ரிலீஸ் - சென்னையில் திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!