கர்நாடகா: கர்நாடகாவில் மே 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி கடந்த 20ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் வேட்புமனு பரிசீலனை முடிவடைந்து, சுமார் மூன்றாயிரம் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மறுபுறம் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சி பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி தீவிர பிரசாரம் செய்து வருகிறது.
இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், அம்மாநிலத்தின் பெரிய மாவட்டமாகவும், அரசியலில் முக்கிய மையமாகவும் அறியப்படும் பெலகாவி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். பெலகாவி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 18 தொகுதிகளில் ஆறில் பெண் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
காங்கிரஸ் சார்பில் லட்சுமி ஹெப்பால்கர், அஞ்சலி நிம்பல்கர், பிரபாவதி மஸ்தமர்டி ஆகியோர் பெலகாவி மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். பாஜக சார்பில் சசிகலா ஜொல்லே மற்றும் ரத்னா மாமணி போட்டியிடுகின்றனர். மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் அஸ்வினி சிங்கையா புஜேரா களம் இறங்கியுள்ளார்.
இதில், காங்கிரஸ் வேட்பாளரும் எம்எல்ஏவுமான லட்சுமி ஹெப்பால்கர், கடந்த 2013ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டார். அந்த தேர்தலில் தோல்வியடைந்த அவர், கடந்த 2018ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு 50,000-க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் பெலகாவி மாவட்டத்தில் களமிறங்குகிறார்.
பாஜக சார்பில் போட்டியிடும் சசிகலா ஜொல்லே தற்போது அமைச்சராக உள்ளார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பெலகாவி மாவட்டத்தில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது மூன்றாவது முறையாக இம்மாவட்டத்தில் போட்டியிடுகிறார். இவர் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை இருவரது அமைச்சரவையிலும் பதவி வகித்தார்.
சவடத்தி எல்லம்மா தொகுதி பாஜக எம்எல்ஏ ஆனந்த் மாமணி கடந்த ஆண்டு மரணமடைந்தார். இதையடுத்து அவரது மனைவி ரத்னா மாமணி அரசியலில் இறங்கியுள்ளார். இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக ரத்னா மாமணி போட்டியிடுகிறார்.
அஞ்சலி நிம்பல்கர், கடந்த 2013 தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது இவர் காங்கிரஸ் சார்பில் களமிறங்குகிறார்.