பெங்களூரு: கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று (மே 13) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 124 இடங்களுடன் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து பாஜக 70, மதச்சார்பற்ற ஜனதா தளம் 23, சுயேட்சைகள் 5, கல்யாண ராஜ்ய பிரகதி பாக்ஷா மற்றும் சர்வோதயா கர்நாடகா பாக்ஷா ஆகிய கட்சிகள் தலா 1 இடத்திலும் அடுத்தடுத்து முன்னிலை வகிக்கின்றன.
கர்நாடகாவில் ஆட்சி அமைய 113 இடங்கள் பெரும்பான்மை வேண்டும் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை உடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், அக்கட்சியின் தொண்டர்கள் டெல்லி மற்றும் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல், காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் மாநில தலைமையகத்தில் திரண்டு வருகின்றனர். அதேநேரம், பசவராஜ் பொம்மை ஷிகாவோன் தொகுதியில் உள்ள பாஜக முகாம் அலுவலகத்தில் உள்ளார்.
இதனிடையே கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதிகளாக அறியப்படும் ராமநகரம், சாந்தி நகர், புலிகேசி நகர், சர்வஞான நகர், காந்தி நகர், சிவி ராமன் நகர், கோலார், கே ஆர் புரா, ராஜாஜி நகர், சிக்பெட், சிவாஜி நகர் மற்றும் கேஜிஎப் ஆகிய தொகுதிகளிலும் பெரும்பான்மையாக காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.
குறிப்பாக, சிவி ராமன் நகர், சிக்பெட், கே.ஆர்.புரா மற்றும் ராஜாஜி நகர் ஆகிய தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. அதேநேரம், கேஜிஎப், புலிகேசி நகர், ராம நகரம், சாந்தி நகர், சர்வஞான நகர் மற்றும் சிவாஜி நகரில் காங்கிரஸ் கட்சியும், கோலார் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளமும் முன்னிலை வகிக்கின்றன.
அதிலும், புலிகேசி நகர் தொகுதியில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றிற்கு அடுத்ததாக 3வது இடத்திலே பாஜக உள்ளது. இவற்றில் கேஜிஎப், புலிகேசி நகர், ராம நகரம் மற்றும் கோலார் ஆகிய தொகுதிகளே மிகுதியான தமிழர்கள் வாழும் தொகுதிகளாக அறியப்படுகிறது.
முன்னதாக 1956ஆம் ஆண்டில் மொழி வாரியாக இந்திய மாநிலங்கள் பிரிக்கப்பட்டு கர்நாடக மாநிலம் உருவாக்கப்பட்டதில் இருந்து, திமுக தனது வேட்பாளர்களை கர்நாடகாவில் களம் இறக்கியது. இதனையடுத்து 1970களில் திமுக உடைந்து அதிமுக உருவான பிறகு, அதிமுக சார்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.
இருப்பினும், காவிரி விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்துவது வெகுவாக குறைக்கப்பட்டது. ஆனால், அவ்வாறே தமிழர்கள் தேர்தல்களில் நிறுத்தப்பட்டாலும், அவர்கள் தங்களை தமிழர்களாக வெளிக்காட்டுவதில் தயக்கம் காட்டி வந்ததாகவே கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கர்நாடகா மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 3.40 சதவீதம் பேர் தமிழர்களாக வசிக்கின்றனர். அது மட்டுமல்லாமல், தமிழர்கள் அதிகமாக குடிபெயர்ந்து வாழும் மாநிலங்களில் கர்நாடகாவே முதல் இடத்தில் உள்ளது. முன்னதாக, தற்போது நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பிலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு, பின்னர் வாபஸ் பெறப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Karnataka Result: 15 அமைச்சர்கள் தோல்வி முகம்.. கர்நாடகாவில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு!