டெல்லி: கர்நாடக மாநில முதலமைச்சராக இருந்த எடியூரப்பா பாஜக தலைமை கேட்டுக்கொண்டதற்கிணங்க தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அம்மாநிலத்தின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், அவர் இன்று டெல்லியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இந்தச் சந்திப்பு குறித்து நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை இன்று சந்தித்தேன். கர்நாடகத்தின் முன்னேற்றத்திற்காகத் தொடங்கிய அவரது புதிய பயணத்திற்கு வாழ்த்துகள். கர்நாடக வளர்ச்சிக்கு முழு ஆதரவு உறுதி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தலைவர்களுடனான சந்திப்பு குறித்து பசவராஜ் பொம்மையின் ட்வீட்டுகள்:
- டெல்லியில் இன்று மத்திய உள் துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தேன். அப்போது மாநிலத்தின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தோம். அச்சமயம் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி என்னுடன் இருந்தார்.
- நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடனான சந்திப்பில் மாநிலத்தில் உள்ள பல்வேறு நீர்த் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவைச் சந்தித்தேன். அப்போது என்னுடன் பிரகலாத் ஜோஷி இருந்தார்.
பிரதமர் அலுவலக ட்வீட்டில், "கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இன்று கூட்டாக பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.