கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவர் மாநில முதலமைச்சராக பொறுப்பேற்று ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், தனது அரசின் செயல்பாடுகளை கட்சி மேலிடத்திடம் தெரிவிப்பதற்காக இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
பொம்மை தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்று ஆறு மாத காலம் ஆகியுள்ள நிலையில், அமைச்சரவையை விரிவாக்க வேண்டும் என்ற குரல் தீவிரமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கட்சி மேலிடத்தில் பேசவே டெல்லி சென்றுள்ளதாக கர்நாடக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மாநில அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறினார். இதன் பின்னர் பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டாவை முதலமைச்சர் சந்திக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா அமைச்சரவையின் மொத்த பலம் 34 ஆக உள்ள நிலையில், தற்போது 30 அமைச்சர்கள் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள நான்கு இடங்களுக்கான நபர்கள் உ.பி. உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலுக்குப் பின் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியாவைச் சீண்ட வேண்டாம்! - சீனா, பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் எச்சரிக்கை