பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் ஹுப்பள்ளியில் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாக 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹுப்பள்ளி போலீசார் தரப்பில், "ஹுப்பள்ளியை சேர்ந்த கார்த்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஷீலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்துவந்த நிலையில் அண்மையில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொண்டனர். அதன்பின் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.
இந்த நிலையில் கார்த்தி இன்று (நவம்பர் 16) எங்களிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது மனைவி ஷீலா தன்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு வற்புறுத்துவதாகவும், இல்லையென்றால் தன்னுடன் வாழ மறுப்பதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, உள்ளூர் ரவுடி மதன் புகுடி என்பவரை வைத்து சில கிறிஸ்தவ மிஷனரிகள் தன்னை மதம் மாற சொல்லி மிரட்டுவதாகவும் குறிப்பிட்டார். அதனடிப்படையில், ரவுடி மதன் புகுடி உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் ஷிக்கலிகாரா சமூகத்தை சேர்ந்த மக்கள் ஹுப்பள்ளி காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சில கிறிஸ்தவ மிஷனரிகள் இந்து மதத்தைச் சேர்ந்த ஷிக்கலிகாரா சமூகத்தை குறிவைத்து ஒட்டுமொத்தமாக மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவில் வாழும் அனைவரும் இந்து: ஆர்எஸ்எஸ் தலைவர்