மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா அரசை கடந்த சில மாதங்களாகவே கடுமையாக விமர்சித்துவருகிறார் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். குறிப்பாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை நேரடியாக அவர் தாக்கிப் பேசிவருதால் அவர் மீது அக்கட்சியினரும் தொண்டர்களும் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், கங்கனா ரணாவத்திற்கு சொந்தமான அலுவலகக் கட்டடத்தை மும்பை மாநகராட்சி ஊழியர்கள் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி இடித்தனர். இந்த கட்டடம் விதிமுறை மீற ஒப்புதல் பெற்று கட்டியுள்ளதாக மாநகராட்சி சார்பில் கூறப்பட்டது.
இது தன்மீது உள்ள காழ்ப்புணர்வு காரணமாக எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை என நடிகை கங்கனா சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஜே. கத்வாலா, ஆர்.ஐ சாக்லா அமர்வு மாநகராட்சியின் நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பானது என விமர்சித்துள்ளது.
மாநகராட்சி குடிமக்களின் உரிமைகளை மீறி இதுபோன்ற சூழ்ச்சியான செயலை மேற்கொண்டது கண்டனத்திற்குரியது என தெரிவித்த நீதிபதிகள், சேதாரத்திற்கான உரிய இழப்பீட்டை கங்கனாவுக்கு விரைந்து வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. தனக்கு இழப்பீடாக இரண்டு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கங்கனா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை நீதிமன்றம் வரும் நாட்களில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கோவிட்-19 நிலவரம்: இந்தியாவில் 93 லட்சத்தை தாண்டிய பாதிப்பு